search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மணமக்களின் ‘தேன் மாதம்’

    தமிழில் திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிப்பது போல், ‘மூன்’ என்ற ஆங்கில சொல் நிலவையும், மாதத்தையும் குறிக்கும்.
    புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்வின் தொடக்கக் காலத்தை ஆங்கிலத்தில் ‘ஹனிமூன்’ என்பார்கள். அதனை தமிழில் தேன்நிலவு என்று கூறுவார்கள். இது தவறான மொழி பெயர்ப்பாகும் என்கிறார் தமிழறிஞர் பேராசிரியர் கு.அரசேந்திரன். அதனை ‘தேன் மாதம்’ என்றே சொல்ல வேண்டும் என்கிறார். அதற்கான காரணத்தை இப்படி விவரிக்கிறார்...

    “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பார்கள். அதாவது திருமணமான ஒரு மாத காலம் அவர்களின் இல்லற வாழ்க்கை தேன் போன்று தித்திப்பதாக இருக்கும். இதனைத்தான் ஆங்கிலத்தில் ‘ஹனிமூன்’ என்றார்கள்.

    ஹனி-என்றால் தேன். மூன் என்றால் ஆங்கிலத்தில் நிலவையும் குறிக்கும் மாதத்தையும் குறிக்கும். எனவே ‘ஹனி மூன்’ என்பதை ‘தேன் மாதம்’ என்றே உணர வேண்டும். மாறாக ‘தேன்நிலவு’ என தவறாக கூறி விட்டார்கள்.

    இந்த ‘ஹனி மூன்’ என்ற வார்த்தை எப்படி உருவானது என்பதை பார்ப்போம்.

    தேனைக் குறிக்கும் ஹனி  என்ற ஆங்கில சொல்  காஞ்சனம் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதாக கூறுவார்கள். காஞ்சனம் என்றால் தங்கம். இதன்  மூலவேர் தமிழில் உள்ள ‘காய்’ ஆகும். காய், காய்தல் என்றால் வெப்பம், தககப்பு, பளபளப்பு.
    தங்கம் தகதகவென பிரகாசிப்பதால் காஞ்சனம் என்றனர்.  

    இந்த காஞ்சனம் என்ற சொல் காஞ்சனே-ஹானே என மருவி ஆங்கிலத்தில் ஹனி என்றானது. தேன், உருக்கிய தங்கம் போல் இருப்பதால் அப்பெயர் பொருத்தம்தான்.

    இதே போல் ‘மூன்’ என்ற ஆங்கிலச்சொல், தமிழின் ‘மா’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். மா- என்றால் அளவு என்பது பொருளாகும். அதிலிருந்து தான் மாத்திரை உண்டானது. மாத்திரை என்றால் கால அளவை குறிக்கும். இது எம்மாம் பெருசு, இவன் எனக்கு எம்மாத்திரம்? என்பவையெல்லாம் அளவை, தரத்தை குறிப்பதை அறியலாம். ஆங்கிலத்தில் மீட்டர், மெஸர் என்ற அளவையெல்லாம்  ‘மா’ வில் இருந்து உண்டானவையே.

    தமிழ்  ‘மா’ தான் மான்-மோன் என்றாகி பின்னர் மூன் என ஆங்கிலத்தில் நிலவை குறிக்கும் சொல்லானது. தமிழில் திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிப்பது போல், ‘மூன்’ என்ற ஆங்கில சொல் நிலவையும், மாதத்தையும் குறிக்கும்.

    மூன்-மோன்-மோந்த் என்றாகி பின்னர் மாதத்தை குறிக்கும் மந்த் ஆனது. திங்கள் (நிலவு) கிழமையை குறிக்கும் மூன்டே தான் மண்டே ஆனது.

    ஆக ‘ஹனிமூன்’ என்ற ஆங்கில வார்த்தையில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கின்றன. அதனை தமிழில் தேன் மாதம் என்று சொல்வதே சரியானதாகும்.

    -தொகுப்பு கோ.வசந்தராஜ்
    Next Story
    ×