search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பெண்கள்
    X
    பெண்கள்

    பெண்கள் அதிகமாக பேசுவது ஏன்?

    பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகவே சித்தார்த்துக்குப் பிடிக்க இல்லை. வீட்டில்  என்ன நடக்குமோ என்ற பயம். அதுக்குக் காரணம், அன்றுதான் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிருந்தன. பத்தாவது படிக்கும் சித்தார்த், மிகவும் குறைவாக மார்க் வாங்கியிருந்தான். அதே நேரத்தில், அன்றைய தினமே 8-ம் வகுப்பில் படிக்கும் அவனுடைய தங்கை சுமதிக்கும் மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவள்தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண். இதைக்கேட்டதும், சித்தார்த்துக்கு இன்னும் பயம் அதிகமாகி விட்டது.

    இவன் நினைத்தது போலவே, வீட்டில் அப்பாவும் அம்மாவும் அவனை திட்டித் தீர்த்து விட்டார்கள். சுமதிக்கு நாங்க சொல்லிக்கொடுக்கறதே இல்லை. அவளே படிச்சு எப்படி மார்க் எடுத்திருக்கா பாரு. நீயும் இருக்கியே. நானும் அம்மாவும் ஆபீஸ்ல இருந்து வந்து உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறோம். ஸ்பெஷல் டியூஷன் வேற போற, அப்படி இருந்தும் இப்படி மார்க் வாங்கியிருக்கியே. நீயெல்லாம் எப்படிப் படிச்சி பாஸ் பண்ணப்போறியோ தெரியல. இதுபோன்ற சம்பவங்கள் வீட்டுக்கு வீடு நடப்பது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஆண் குழந்தைகள் பொறுப்பின்றி ஊர் சுற்றுவதால், தேர்ச்சி விகிதம் குறைவு என்று கூறினாலும், பெண்கள் அதிக மதிப்பெண் பெற இயற்கையும் அவர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். எப்படி?

    மூளையை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று பிரித்திருக்கிறார்கள். இதில் முன் மூளையை செரிபெரல் கார்டெக்ஸ் என்பார்கள். இப்பகுதியில்தான் பார்ப்பவை, படிப்பவை எல்லாம் நன்கு பதியத் தொடங்குகின்றன. பெண்களுக்கு இந்தப் பகுதி ஆண்களைவிடவும் சற்று தடிமனாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுலபமாகச் சொன்னால், தடிமனான காகிதத்தில் எழுதியது, மெல்லிய தாளில் எழுதியதைவிட அழுத்தமாகவும், அதிக நாளும் இருக்கும். அதுபோல், பெண்களின் ஞாபக சக்தியும் ஆண்களை விட சற்று அதிகமே.

    அதேபோல், வளவளவென்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் அந்த செரிபெரல் கார்டெக்ஸின் அதிகப்படியான தடிமன் தான் காரணம். ஆண்களால் பெண்களைப்போல் வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்த முடியாதாம். கிட்டத்தட்ட பெண்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதி அளவை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

    சரி, ஆண்-பெண் மூளைக்கு இடையே உள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்ப்போமா?

    ஆண்கள் மூளை, பெண்கள் மூளையைவிட அளவில் சற்று பெரிதுதான். ஆனாலும், வயது ஏற ஏற பெண் மூளையைவிட சுருங்கி விடுகிறது.

    சிந்திக்கும் போது பெண்களே அதிக அளவு மூளைத் திறனை உபயோகிக்கின்றனர்.

    மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர் பரைடல் லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

    சாதாரணமாக ஓர் ஆணுக்கு 15 நிமிடத்துக்கு ஒரு முறை பாலுணர்வு தோன்றும். ஆனால், ஒரு பெண்ணுக்கோ ஒரு நாளில் ஒரு முறையோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒரு முறையேதான் தோன்றுமாம்.

    பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    தொந்தரவு தரக்கூடிய சிறு ஒலியைக்கூட, ஆண் குழந்தைகளைவிட பிறந்த பெண் குழந்தைகள் விரைவில் கண்டுகொள்ளும். அதனால்தான், கணவனின் கடுமையான குறட்டைச் சத்தத்துக்கு இடையிலும் குழந்தையின் சிறு சிணுங்கலைக்கூட ஒரு பெண்ணால் கண்டுகொள்ள முடிகிறது.

    ஒரு பெண்ணை 20 விநாடிகள் கட்டிப்பிடித்திருந்தாலே, ஆக்ஸிடாஸின் என்ற ரசாயனப் பொருள் அவள் மூளையில் சுரந்துவிடும். அதனால், கட்டிக்கொண்டு இருந்தவரின் மீது அந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வந்துவிடுமாம்.

    பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகப்படுத்துகிறார்கள் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

    -டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன்
    Next Story
    ×