search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண்களின் திருமணத்துக்கு ஏற்ற வயது எது?- முனைவர் ஆ ஜ. ஹேமமாலினி சிறப்பு கட்டுரை

    உளவியலாளர்களின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு பெண்ணிற்கு மனரீதியான வளர்ச்சி 21 வயதிற்கு மேல்தான் முழுமை அடைகிறது.
    ஒரு பெண் பூப்பெய்திய உடனேயே அவள் திருமண வாழ்க்கைக்கு தயாராகி விடுகிறாளா?

    கண்டிப்பாக இல்லை. குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பருவமாக வளர்கிறார்கள் அல்லவா, நடை பயில்வது, பேசப்பழகுவது, சாப்பிடப்பழகுவது, பல் முளைப்பது, இப்படி, ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி நடைபெறுகிறது.

    அதைப்போலத்தான் பூப்பெய்துவதும்.. இது ஒரு வளர்ச்சியின் அங்கமாகும், ஒரு மாற்றத்தின் வெளிப்பாடாகும். இந்த மாற்றம் முழுமை பெற, குறைந்தது ஏழு முதல் எட்டு வருடங்கள் ஆகலாம். அது முழுமைப்பெற்ற பிறகே ஒரு பெண் திருமண வாழ்க்கைக்குத் தயாராகிறாள்.

    இயற்கை அதனுடைய வளர்ச்சிக்கும் மனித குல வளர்ச்சிக்கும் பெண்மையை சார்ந்துள்ளது. ஒரு உயிர் உலகில் ஜனிக்க, பெண் முக்கிய காரணமாக இருக்கிறாள். மகப்பேறு என்பது, ஒவ்வொரு பெண்ணிற்கும் மறு ஜென்மமே.

    இயற்கையின் இந்த மகத்தான பணி செய்யும் பெண்ணின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இப்பணியை செவ்வனே செய்யமுடியும், அதன்மூலம் உண்டாகும் உருவாகும் அடுத்தடுத்தத் தலைமுறையும் ஆரோக்கியமாக அமையும்.

    உளவியலாளர்களின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு பெண்ணிற்கு மனரீதியான வளர்ச்சி 21 வயதிற்கு மேல்தான் முழுமை அடைகிறது. உடலளவில் மாற்றங்களிலிருந்தாலும், மனதளவில் அவர்கள் குழந்தைகளே.

    18-20 வயது வரை தாய் தந்தையரின் பேரன்பில் வளரும் பெண் குழந்தை மணமானப்பிறகு பல விஷயங்களை கற்கவும் பல விதமான சொந்தங்களை சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், இந்த மன ரீதியான வளர்ச்சி மிக முக்கியம்.

    இதன் மூலம் ஒரு பெண் “டிப்ரஷன்” எனப்படும் மன உளைச்சலிலிருந்தும், அதன் அபாயகரமன பின் விளைவுகளிலிருந்தும் எளிதில் தன்னை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

    இவ்வகையான மனோதிடத்தை அளிப்பதில், பெற்றொர்களின் பங்கு இன்றியமையாதது. பெண்ணிற்கு முறையான கல்வி கற்பிப்பதிலும், திருமணம் செய்வதிலும் பெற்றோர்கள் காட்டும் முனைப்பைப்போலவே, அவளுடைய மனப்பக்குவத்தை சீர்தூக்கும் பணியும் பெற்றொரைச் சார்ந்தது. அதன் அடிப்படையிலேயே பெண்ணின் திருமண வாழ்வில் வெற்றியடைய முடியும்.

    மன பக்குவத்திற்கும், நம் மூளையின் ஆற்றலுக்கும், உணவு முறைகளுக்குமிடையே நிறைய தொடர்பு உள்ளது.

    புரதம், அதனைச்சார்ந்த அமிலங்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள், ‘பி’ வைட்டமின்கள், ஃபைடொகெமிகல்ஸ் எனப்படும் நிறமி சார்ந்த உணவுகள்,இவையனைத்தும் மூளையின் சிக்னல்களையும், அதன் வேலை செய்யும் கூர்மையையும் மேம்படுத்துகிறது.

    இவ்வகை சத்துக்கள் தானிய வகைகள், பருப்பு மற்றும் கொட்டை வகைகள், இயற்கையாக அமையபெற்ற கலர் கலர் பழங்கள், காய்கறிகள், போன்றவற்றின் மூலம் அதிகமாக கிடைக்கிறது.

    இவற்றை ரெகுலராக சாப்பிடுவதினால் நமது குடலிலிருக்கும் நல்ல நுண்ணுயிர் கிருமிகள் [ப்ரொபையாடிக்ஸ்] மேலும் வலுப்பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியும், சுறு சுறுப்பும் அளித்து, மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

    தற்பொழுது, விடலைபருவத்திலிருக்கும் இரு பாலாரின் உணவு முறைகளில், மேற்கூறிய நன்மை பயக்கும் சத்துக்களின்/உணவுகளின் விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது, என்றே கூறலாம். அவர்களின் உணவில் தேவைக்கதிகமான சர்க்கரை, உப்பு, மற்றும் கொழுப்புச்சத்துகள் காணப்படுகிறது. காய்கறிகள், மற்றும் பழங்களின் அளவை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

    இவ்வாறன உணவு பழக்கங்கள் அவர்களது வயிறு மற்றும் குடல்களுக்கு ஊறு விளைவிக்கிறது. இதன் மூலம் நல்ல நுண்ணுயிர்கிறுமிகள் நாளடைவில் நலிவடைகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற மற்ற பிற உடல் உபாதைகள் வயது ஆக ஆக எளிதில் பாதிக்கிறது.

    அதுமட்டுமில்லாமல், உடல் பருமன், இரத்த சோகை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றின் மூலம் மனச்சோர்வு உண்டாகும்.

    மனம் சோர்வுற்றிருந்தால், உடலும் சோர்ந்து தானே போகிறது. இதனையே ஆங்கிலத்தில் “ஹெல்த்தி மைன்ட் இன் ஹெல்த்தி பாடி” என்று கூறுவர். இக்கருத்து, ஆண், பெண் இருபாலார்க்கும் பொருந்தும்.

    ஹேமமாலினி

    இருப்பினும், ஒரு பெண், ஒரு தலைமுறையையே உருவாக்கும் உன்னத இடத்தில் இருப்பதால், பெண்ணின் மனம் மற்றும் உடல் வலிமை, அரோக்கியம் மிக முக்கியம். அவற்றை சிறு வயதிலிருந்தே சமன் படுத்தி வந்தால் அவர்களது திருமண வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. வரும் சந்ததியினரும் அரோக்கியமாக வாழலாம்.

    ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பத்திற்கே விளக்கேற்றுவாள், என்னும் கூற்றிற்கிணங்க, சரியான அகவையில், மணவாழ்வில் அடியெடுத்துவைக்கும் பெண்ணின் மனதும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமுண்டோ!
    Next Story
    ×