search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் - நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் - நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழக வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆலோசனை வழங்கினார். சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    எப்போதும் நான் சாதாரண பழனிசாமி தான். இதே நிலையில் தான் இருப்பேன். குழந்தைகளுக்கு ஊட்ட சத்து கொடுப்பது போல நலிவுற்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

    ஆனால் இந்த திட்டத்தை தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று அறிவுரை கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?.

    ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சியை உடைக்க ஆட்சியை கலைக்க எத்தனையோ? போராட்டங்களை நடத்தினர். இனி இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தி.மு.க.வினரே பேச தொடங்கி விட்டனர்.

    நான் மட்டுமென்ன நிம்மதியாகவா? இருக்கிறேன்.முதல்வர் பதவியை விட்டு எப்போது வேண்டுமானாலும் விலக தயார். முதல்வர் கனவு காண்பவர்கள் முறையாக மக்களை சந்தித்து தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் பதவிக்கு வரட்டும். அதிக இளைஞர்கள் கொண்ட அ.தி.மு.க. வலிமையாக உள்ளது.

    வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு 625 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 60 வார்டுகளிலும் கூட்டம் நடத்தி வளர்ச்சி பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    என் சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுத்து நெடுஞ்சாலையில் முறைகேடு நடந்ததாக கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் ராமலிங்கம் அண்ட் கோ நிறுவனத்திற்கு ஒரே நாளில் 8 ஒப்பந்தம் வழங்கப்பட்டது. துரைமுருகன், கருணாநிதி ஆகியோர் சேர்ந்து சிங்கிள் சிஸ்டம் முறையில் 294 ஒப்பந்தங்களை வழங்கினர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்.

    மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது.

    நிறைய வி‌ஷயம் தி.மு.க. பற்றி சொல்ல வேண்டியுள்ளது. சூழ்நிலை சரியில்லை என்பதால் தி.மு.க.வை விமர்சிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வினர் மனிதாபிமானம் கொண்டவர்கள்.

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 முதல் 4 மணி மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.

    தமிழகம் முழுவதும் 40 சாலைகளை 4 வழிச்சாலைகளாக அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.

    சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பின்னர் முதல் முறையாகவும், தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு 2-வது முறையாகவும் மாநகர் மாவட்ட அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., சக்திவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சாலையில் இரு புறங்களிலும் நின்று நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மேலும் தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. #EdappadiPalaniswami

    Next Story
    ×