search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா ஆடியோ வெளியீடு - துப்பாக்கி சூட்டை திசைதிருப்ப தமிழக அரசு தந்திரம் - சி.ஆர்.சரஸ்வதி
    X

    ஜெயலலிதா ஆடியோ வெளியீடு - துப்பாக்கி சூட்டை திசைதிருப்ப தமிழக அரசு தந்திரம் - சி.ஆர்.சரஸ்வதி

    ஜெயலலிதா ஆடியோ வெளியிட்டது, துப்பாக்கி சூட்டை திசைதிருப்ப தமிழக அரசு தந்திரம் என்று தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். #jayalalithadeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கடைசி பேச்சு ஆடியோவை வெளியிட்டது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இது பற்றி தினகரன் அணியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடியோ பேச்சு ஆஸ்பத்திரியில் பதிவு செய்யப்பட்டது. தங்களிடம் உள்ளதாக டாக்டர் சிவக்குமார் கடந்த ஜனவரி மாதம் விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.

    அந்த ஆடியோவை விசாரணை ஆணையம் இதுவரை கேட்காமல் நேற்று திடீரென டாக்டர் சிவக்குமாரை வரவழைத்து வாங்கி உள்ளது. இந்த ஆடியோவை விசாரணை ஆணைய செயலாளர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். ஆடியோவை வெளியிட செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டதற்கு வெற்றிவேல் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இப்போது விசாரணை ஆணைய செயலாளரே ஆடியோவை வெளியிடலாமா? அவர் மீது வழக்கு பாயுமா?


    பொதுவாக விசாரணை ஆணைய தகவல்கள் அனைத்தையும் நீதிபதி தான் முதல்-அமைச்சரை சந்தித்து கொடுப்பது வழக்கம். பின்னர் சட்டமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு அதன் விவரங்கள் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும். இதுதான் நடைமுறை.

    ஆனால் இப்போது விசாரணை ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

    இதற்கு முன்பு சசிகலா பரோலில் வந்திருந்த போது கொடுத்த பிரமாண பத்திர அபிடவிட் விவரங்களையும் இதே விசாரணை ஆணைய செயலாளர்தான் பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்.

    அன்றைய தினம் நீதிபதி விடுமுறையில் இருந்தார். அப்படி இருக்கையில் செயலாளர் அதை பிரித்து பார்த்து பத்திரிகைக்கு கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

    எனவே விசாரணை ஆணையத்தை அரசு தவறாக வழி நடத்துவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இன்னும் சொல்லப் போனால், சசிகலா உறவினர்கள், டாக்டர்கள், போயஸ் கார்டனில் பணி புரிந்த ராஜம்மாள் உள்பட பலரை அழைத்து விசாரிக்கிறார்களே தவிர, அன்றைய தினம் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இதுவரை விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை. அது மட்டுமல்ல அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற அனைத்து அமைச்சர்களையும் விசாரணை ஆணையம் ஏன் விசாரிக்க வில்லை.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிகிச்சை விவரங்கள் அனைத்தும் தெரியும். அவரை ஏன் விசாரணை ஆணையம் விசாரிக்க மறுக்கிறது.

    எனவே விசாரணை ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithadeath

    Next Story
    ×