search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களை நான் தான் தேர்வு செய்தேன் - தினகரன்
    X

    இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களை நான் தான் தேர்வு செய்தேன் - தினகரன்

    நான் தேர்வு செய்து கொடுத்த 90 சதவீதம் பேர் இப்போது அமைச்சர்களாவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #MayDay

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் என்னால் தோற்கடிக்கப்பட்டது வருத்தம் தான்.

    இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கைகளில் உள்ளது. இரட்டை இலை இன்று உயிரோடு இல்லை. ஆட்சியாளர்களிடம் இருப்பது அமைச்சர்களும், நிர்வாகிகளும் தான். கட்சிக்கு ரத்தமும், சதையாகவும் உள்ள தொண்டர்கள் நம்மிடம் உள்ளார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மூலம் நிச்சயம் மீட்போம். இரட்டை இலையும், அ.தி.மு.க.வும் மீண்டும் உயிர்பெறும் என்பதை உறுதியாக கூறுகிறேன். என்றைக்கு வேண்டும் என்றாலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை செயலிழக்க செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி ஆயுதமாக எங்கள் உறவினரில் சிலரை தூண்டி விட்டுள்ளனர்.

    பொதுச்செயலாளரின் உறவினர் என்ற காரணத்தால் கட்சிக்காரர்களால் மதிக்கப்பட்ட சிலர், சோழ மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை தங்களுடன் இழுத்துக்கொண்டு உங்களிடம் வந்து இணைகிறோம் என்ற பொய்யை நம்பிக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அதுவும் தவறாக முடியப்போகிறது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் எங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் கட்சிப்பதவி கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் தான் தொடர்ந்து உள்ளனர். எனது ரத்த உறவுகள் யாருக்கும் கட்சி பொறுப்பு வழங்கப்படவில்லை. பொதுச்செயலாளர் செயல்பட முடியாததால் நான் செயல்பட்டு வருகிறேன். குடும்பம் என்பது வேறு. கட்சி என்பது வேறு.

    ஜெயலலிதா இருந்தபோது பல பொறுப்புகளில் நான் இருந்தவன். ஜெயலலிதா என்னை தமிழகம் முழுவதும் 2 முறை சுற்றுப்பயணம் செய்ய வைத்து, பல அமைப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பை வழங்கினார். நான் தேர்வு செய்து கொடுத்த 90 சதவீதம் பேர் இப்போது அமைச்சர்களாவும், எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.க்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள்.

    வரும் காலத்தில் தேர்தல் வந்தால் கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கோட்டை என்ற வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்து அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #MayDay

    Next Story
    ×