search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    கர்நாடகாவில் தொடரும் விலகல் படலம்: மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. பா.ஜ.கவில் இருந்து விலகல்
    X

    கர்நாடகாவில் தொடரும் விலகல் படலம்: மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. பா.ஜ.கவில் இருந்து விலகல்

    • பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.
    • ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    பீதர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சூர்யகாந்த் நாகமரபள்ளி. இவருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூர்யகாந்த் நாகமரபள்ளி, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர உள்ளார். இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றுடன் சூர்யகாந்த் நாகமரபள்ளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்.பி.யாக இருந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வந்தார். ஆனால் எம்.பி.யாக இருக்கும், யாருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பா.ஜனதா மேலிடம் கரடி சங்கண்ணாவிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து, தன்னுடைய மகன் கவிசித்தப்பாவுக்கு கொப்பல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி கரடி சங்கண்ணா கேட்டு வந்தார். ஆனால் கவிசித்தப்பாவுக்கும் சீட் வழங்காமல், கொப்பல் தொகுதிக்கு பா.ஜனதா வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள கரடி சங்கண்ணா நேற்று கொப்பலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்று சபாநாயகர் ஓம்பிரகாஷ் பிர்லாவை சந்தித்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கரடி சங்கண்ணா முடிவு செய்துள்ளார்.

    பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்து வருகிற 19-ந் தேதி கொப்பல் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) அவர் காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    Next Story
    ×