search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை?
    X
    எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை?

    வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறை

    இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் நாம் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்.
    ‘வாழ்க்கை என்பது வியாபாரம்’ என்று கவியரசு கண்ணதாசன் பாடியது போல் வாழ்க்கையே வியாபாரமாகி வருகிறது. பலரும் தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய எதிர்காலம் என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    இயல்பான வாழ்க்கை என்பதுதான் யதார்த்தமானது, நிஜமானது. இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது. தான் மட்டும் வாழவேண்டும். தனது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது.

    ஒரு குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்வதுதான் அதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி. இன்றைய முரண்பாடான வாழ்க்கை, குழந்தைக்கு அந்த அரவணைப்பை தருவதில்லை. மாறாக வருங்கால வசதி, வைப்பு நிதி, சமூக அந்தஸ்து, ஆடம்பரம் இவைகளை எல்லாம் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் ஒரு மழலையை கூட வஞ்சித்து விடுகிறது இன்றைய வியாபார வாழ்க்கை. அதில் லாப-நஷ்ட கணக்குப்போட்டு பெற்ற பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு, தங்களையும் ஏமாற்றி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

    வயதான பெற்றோரை காப்பாற்றுவது பிள்ளைகளின் கடமை. ஆனால் இன்றைய வாழ்க்கை, அந்த கடமையை பின்னுக்கு தள்ளிவிட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

    இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.

    ‘அது தவறல்லவா?’ என்று அவர்களிடம் கேட்டால், ‘தான் ஒரு பிராக்டிகல் மனிதன்’ என்கிறார்கள். இப்படி சொல்வதை ஒரு அறிவாளித்தனம் என்று கருதிக்கொண்டு, வாழ்வதற்கு என்றே படைக்கப்பட்ட நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் பிராக்டிகல் என்ற மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மேலே முள் செடியையும் நட்டு வளர்த்து, வாழ்க்கையையே ஒரு முட்காடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு அழகான ரோஜா மலரைப் பார்த்து ரசிக்க கூட இந்த பிராக்டிகல் மனசுகாரர்களால் முடியாது. விளைவு வாழ்க்கையும் முள்ளாகிப் போகிறது. விட்டுக் கொடுத்தல், பணிந்து போதல், மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் இவை எதுவுமே பிராக்டிகல் எனப்படும் வியாபார வாழ்க்கையில் இருக்காது. அந்த வாழ்க்கை தனக்கு ஒரு அந்தஸ்தை தரும். சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துவிடும்.

    ‘பிராக்டிகல்’ என்ற ஒன்று நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்ற எண்ணம் பலபேர் மனதில் வேரூன்றி விட்டது. இதனால் தங்களுடைய `தனித்துவத்தை' தொலைத்துவிட்டு கடனே என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே கற்பனைகள் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த கற்பனையில் மனிதனால் வாழ முடியாது. பிராக்டிகல் என்ற ஒன்று வாழ்க்கையை திசைமாற்றிவிடக் கூடாது. தவறுகளை நியாயப் படுத்தவும் அது பயன்படக்கூடாது. உண்மைகளை அது மறைக்க கூடாது. உறவுகளையும் சிதைத்து விடக்கூடாது.

    வாழ்க்கை வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நாமும் வியாபாரி ஆகிவிடாமல் நிஜ வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும். நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் நாம் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்.
    Next Story
    ×