search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உரிமைக் குரல் எழுப்பும் ‘ஒப்பந்த மனைவிகள்’
    X
    உரிமைக் குரல் எழுப்பும் ‘ஒப்பந்த மனைவிகள்’

    மாறும் பெண்கள் உலகம்: உரிமைக் குரல் எழுப்பும் ‘ஒப்பந்த மனைவிகள்’

    உலகில் பல்வேறு நாடுகளில் ஒப்பந்த மனைவிகள், விருப்பப்பட்ட ஆண்களோடு ‘வாழ்ந்து’ கொண்டிருக்கிறார்கள். ஒதுங்கியும், பதுங்கியும் வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் இப்போது தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
    திருமணம், இந்திய கலாசாரத்தோடு ஒருங்கிணைந்தது. இந்தியர்களின் வாழ்க்கையில் மிகமுக்கியமானது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நம் கலாசாரத்தை காட்டும் தாரக மந்திரமாக இருக்கிறது. ‘மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடனும் வாழ்க்கை’ என்பதை இன்றுவரை நமது கலாசாரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குற்றச்செயலாகவும், குறைவுள்ள வாழ்க்கையாகவும் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாடுகள் சிலவற்றில் இதில் தாராள நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் இ்ஷ்டம்போல் வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இங்கே ஆணுக்கு ஒரே ஒரு திருமணம் என்பதும், அவனது இந்த ஜென்மம் முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் சக்தியாக அதுவே இருக்கும் என்பதும் நிதர்சனமானது. அது மட்டுமல்லாமல் சமூக பாதுகாப்பு என்பதும் திருமணத்தால் ஏற்படுவதால் அதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு, சந்ததியினரின் கல்வி, வளர்ச்சி, எதிர்காலம், பெற்றோரின் வயோதிக கால பாதுகாப்பு ஆகிய அனைத்தும் இந்த திருமண கட்டமைப்பில் அடங்குகிறது.

    இந்திய திருமண கட்டமைப்பு பழமையானது என்று சிலர் குறை கூறிக்கொண்டிருந்தாலும், வெளிநாடுகளில் அதற்கு இருக்கும் மகத்துவம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டு ஜோடிகளும் இந்தியாவிற்கு வந்து, இங்குள்ள முறைப்படி தங்கள் திருமணத்தை நடத்தி மகிழ் கிறார்கள். இந்திய திருமணங்களில் சிக்கல்கள் இருந்தாலும், வெளிநாட்டு திருமணங்களோடு ஒப்பிடும்போது அந்த சிக்கல்கள் குறைவுதான். நம் நாட்டில் விவாகரத்து என்பது இரு குடும்பங்களையும் பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. விவாகரத்து என்பது சமூகத்தில் சற்று சறுக்கலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள் வாழாவெட்டி என்ற பெயரோடு தாய்வீட்டில் அடைக்கலம் புகுந்த காலம் மாறிவிட்டது. பெண்கள் எந்த நிலையிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்ட இந்த காலகட்டத்திலும் விவாகரத்து என்பது விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் ஒருவனுக்கு ஒருத்தியாக அனுசரித்துச்செல்லும் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகிறது.

    முந்தைய காலத்தில் இ்ந்திய மன்னர்களும், வசதி படைத்தவர்களும் பலதார மணம் முடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பல பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கை எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழும் முறை ஐரோப்பிய நாடுகளில் இன்றும் உள்ளது. அதில் குறிப் பிடத்தக்கது, ‘ஒப்பந்த மனைவிகள்’ என்ற முறை!

    எந்த ஒரு விஷயத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சரி, தவறு என்று சொல்லிவிட முடியாது. அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் அமையும். சில நாடுகளில் வயதானவர்கள் துணைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் பணக்கார பெண்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவளது செலவில் தானும் வாழ்ந்துவிடலாம் என்ற ஆசைகூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

    ஆண்களில் பலர் அதிக சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவளுக்காக கட்டுப்பட்டு வாழவேண்டும் என்றும், அவளால் தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் கருதுகிறார்கள். அதனால் திருமணம் என்ற கட்டுக்கோப்புக்குள் வர அவர்கள் தயங்குகிறார்கள். இன்னொருபுறம் ஆண்கள் பொறுப்புகளை சுமக்கவும் தயங்குகிறார்கள். முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் அவளுக்கான பாதுகாப்பு, உரிமைகளை வழங்கவேண்டியதிருக்கும். அவளுக்கான கடமைகளையும் செய்யவேண்டியதிருக்கும். அப்படி எந்த பொறுப்பும் இல்லாமல் வாழ விரும்புகிறவர் களுக்கு உதவுபவர்களாக இருப்பவர்கள், ஒப்பந்த மனைவிகள். இவர்கள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு, தங்களை இணைத்துக்கொள்பவர்களோடு, ஒப்பந்த காலம் வரை வசிப்பார்கள். அவர்கள் மீது கணவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அன்பையும் செலுத்தமுடியாது. உடல்ரீதியான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மனோரீதியான திருப்தி எந்த அளவுக்கு ஏற்படும் என்று சொல்லமுடியாது.

    உலகில் பல்வேறு நாடுகளில் ஒப்பந்த மனைவிகள், விருப்பப்பட்ட ஆண்களோடு ‘வாழ்ந்து’ கொண்டிருக்கிறார்கள். அதிகம் முகம்காட்டாமல் ஒதுங்கியும், பதுங்கியும் வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் இப்போது தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒன்றிணைந்து, உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்று சேர்ந்து வாழும் அவர்கள் ‘ஒப்பந்தம் முடிந்த பின்பு எங்கள் எதிர்காலம் என்னவாகும்? ஒப்பந்த காலத்தில் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றுவிட்டால் அந்த குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தையை பராமரிப்பது யார்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை களால் ஒப்பந்த மனைவிகளை வைத்துக்கொள்ளும் செல்வந்தர்கள் அந்த மனைவிகளின் எதிர்கால தேவைகளுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பணம் படைத்த ஆண்களிடம் ஏமாந்து, தங்கள் எதிர்காலத்தை தொலைத்துவிடக்கூடாது என்பதில் ஒப்பந்த மனைவிகள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

    இந்த ஒப்பந்த மனைவிகளின் எண்ணிக்கை உலக நாடுகளில் இப்போது கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர் களது போராட்டங்களாலும், அதனால் ஏற்படும் சமூக சிக்கல் களாலும் ஐரோப்பிய நாடுகளில் பல, இந்தியாவின் திருமண முறை பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வாழ்க்கை முறையே உயர்வானது என்பதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவில் வசதி வாய்ப்பு கொண்டவர்கள், பாரம்பரிய கலாசாரத்தை மறந்துவிட்டு ‘வெளிநாட்டு ஒப்பந்த மனைவிகள் முறை இங்குவந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே’ என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைதான் இதில் ஏற்பட்டிருக்கிறது.

    இங்குள்ள பெருநகரங்கள் சிலவற்றிலும் இந்த ஒப்பந்த மனைவிகள் கலாசாரம் மெல்ல மெல்ல தலைதூக்கத் தொடங்கி யிருக்கிறது. ‘இதன் விளைவு என்னவாக இருக்கும்?’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேள்வி எழுப்புபவர்களுக்கு, காலம்தான் பதில்சொல்லும்!
    Next Story
    ×