search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனந்திறந்து பேசுங்கள்.. மகிழ்ச்சியை உருவாக்குங்கள்..
    X
    மனந்திறந்து பேசுங்கள்.. மகிழ்ச்சியை உருவாக்குங்கள்..

    மனந்திறந்து பேசுங்கள்.. மகிழ்ச்சியை உருவாக்குங்கள்..

    உலக அளவில் மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது; மகிழ்ச்சி குறைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், ‘வாருங்கள் மனந்திறந்து பேசலாம்.. மன அழுத்தத்தை போக்கலாம்’ என்ற கோஷத்தை, உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்திருக்கிறது.
    உலக அளவில் மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது; மகிழ்ச்சி குறைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், ‘வாருங்கள் மனந்திறந்து பேசலாம்.. மன அழுத்தத்தை போக்கலாம்’ என்ற கோஷத்தை, உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்திருக்கிறது.

    மகிழ்ச்சியை குறைக்கும் மன அழுத்தத்தை, திட்டமிட்ட சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விடலாம். போதைப்பொருள் பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால், மன அழுத்தத்தில் இருந்து மீள்வது மிகவும் சுலபம்தான்.

    லேசான மன அழுத்த பாதிப்பு கொண்டவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை மட்டுமே போதுமானது. நிபுணர்கள் சொல்வதை பின்பற்றி நடக்கவேண்டும். சில பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மன அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அதில் இருந்து மீள, குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் அவசியம்.

    மனஅழுத்த அறிகுறி கொண்ட சிலர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சதா நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அளவு கடந்த கோபத்தை வெளிக்காட்டுவர். சிலரோ திடீரென்று தனிமையைத் தேடிச்செல்வர். பின்பு அளவுக்கு அதிகமாக கூட்டத்தோடு நெருங்கிப் பழகிக் கொண்டாடுவார்கள். இந்த தலைகீழ் மாற்றங்கள்கூட ஒருவகை மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான்.

    பெண்களைப் பொறுத்தவரையில் மூன்று பருவ நிலைகளில், இயற்கையாகவே மன அழுத்தம் தோன்றும். மாதவிலக்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பும், பிரசவத்திற்கு பிறகும், மாதவிலக்கு முழுமையாக நின்றுபோகும் ‘மெனோபாஸ்’ காலகட்டத்திலும் பெண்களின் உடலில் இயற்கையாகவே ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை உருவாகும். அப்போதெல்லாம் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகி, மறையும். இதை குடும்பத்தினர் உணர்ந்து பெண்களின் மனநிலை அறிந்து ஆதரவாக நடந்துகொள்ளவேண்டும்.

    ‘ஹைப்போ தைராய்டு’ நோய் இருப்பவர்களுக்கும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தோன்றும். இப்போது பெரும்பாலானவர்கள் ‘ஏ.சி’ அறைக்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், காரிலும், உடற்பயிற்சி செய்யும் ஜிம்மிலும், ஷாப்பிங் செய்யும் கடைகளிலும், ‘ஏ.சி’யிலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் வெயிலோ, இயற்கை வெளிச்சமோ படுவதே இல்லை. உடலில் வெயில் படாமலே இருந்தாலும் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அதுவும் மன அழுத்தத்திற்கான அறிகுறியாக மாறும்.

    சிறுவர், சிறுமியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருத்தல், சாப்பிட விருப்பம் இல்லாமல் இருத்தல், அதிக கோபம் கொள்ளுதல், சத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமை, நண்பர்களோடு சேர்ந்து விளையாட விரும்பாமல் எப்போதும் தனிமையில் இருத்தல் போன்ற குணாதிசயங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருந்தால் கவனியுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் மன அழுத்தத்தின் பிடியில் அகப்படலாம்.

    பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு அதில் இருந்து மீண்டிருப்பதாக தன்னம்பிக்கையோடு அவர் கூறியுள்ளார். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். அதில் இருந்து எல்லோராலும் மீள முடியும்.

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், ஹாரிபாட்டர் கதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற ஜே.கே.ரவுலிங், உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி போன்ற ஏராளமான பிர பலங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வெற்றியாளராகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

    மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வாழ, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள். குடும்ப உறவுகளை மேம்படுத்துங்கள். நட்பு வட்டத்தை ஏற்படுத்துங்கள். நெருக்கமானவர்களிடம் மனந்திறந்து பேசுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் என்டோர்பின் சுரக்கும். அது மனதுக்கு சந்தோஷத்தையும், உடலுக்கு உற்சாகத்தையும் தரும். சமூகத்தோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனதுக்குள் எதையும் பூட்டி வைக்காமல் மனந் திறந்து பேசுங்கள். செல்போனை அதிக நேரம் பயன் படுத்துகிறவர்களுக்கும், இன்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துகிறவர்களுக்கும் மன அழுத்த பாதிப்பு நிறைய ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அவைகளில் மூழ்கிப்போகாதீர்கள்.

    உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மனம் விட்டுப் பேசுங்கள். நீங்கள் மனம்விட்டு பேசுவது, உங்களிடம் பேசுபவரையும் மனம்விட்டு பேசச்செய்யும். அதன் மூலம் உங்களுக்கும், அவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.
    Next Story
    ×