search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரிந்திருந்த தம்பதிகளை இணைக்கும் ‘கொரோனா’
    X
    பிரிந்திருந்த தம்பதிகளை இணைக்கும் ‘கொரோனா’

    பிரிந்திருந்த தம்பதிகளை இணைக்கும் ‘கொரோனா’

    இந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
    கொரோனாவால் தனிமை மற்றும் கவலையில் மூழ்கி இருப்பவர்களுக்கு, இந்தத் தருணத்தில் இந்தக் கதை மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்து, புதிய சிந்தனையை தோற்றுவிக்கும்.

    வெகுகாலத்திற்கு முன்பு புத்தபிக்குகள், பழமை வாய்ந்த களிமண் சிற்பம் ஒன்றை தொன்றுதொட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அது புத்தர் போன்ற தோற்றத்தில் இருந்ததால் வெளிநாட்டினரும் வந்து பார்த்து வழிபட குவிந்தனர். அதனால் அந்தச் சிலையை, பெரிய அரங்கம் ஒன்றிற்கு இடம் மாற்ற, பிக்குகள் நிர்வாகம் முடிவெடுத்தது.

    தேர்ச்சிபெற்ற தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு கிரேன் மூலம் சிற்பத்தைத் தூக்கி நகர்த்தினா். அப்போது தவறு ஏற்பட்டு, சிலை அப்படியே கீழே விழுந்தது. களிமண் சிற்பம் என்பதால் விழுந்த வேகத்திலே நொறுங்கி மண் குவியல்போல் ஆனது.

    அனைத்து பிக்குகளும் அதிர்ந்துபோய் நிற்க, தலைமை பிக்கு மட்டும் அமைதியாக நடந்து அந்த மண் ஓடு குவியல் அருகில் வந்தார். ஓடுகளை அங்கும் இங்குமாக அகற்றினார். உள்ளே தங்க புத்தர் விக்ரகம் ஒன்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை வெளியே எடுத்த அவர், “முன்பு வெளிநாட்டினர் படையெடுப்பு நிகழ்ந்ததால் அவர்களிடமிருந்து இந்த தங்கப்புத்தர் சிலையை காப்பாற்ற அதன் மேல் களிமண்ணை பூசி இருக்கிறார்கள். அதையே மற்றவர்களும் பின்பற்றி களிமண் பூசும் வழிபாடு செய்ததால் இது பெரிய களிமண் சிற்பம் போல் ஆகிவிட்டது. இந்தச் சிற்பம் கீழே விழுந்ததால்தான் உள்ளே இருந்த அற்புதமான தங்க விக் ரகம் நமக்கு கிடைத்தது” என்றார்.

    இந்தக் கதை உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா?

    இது (கொரோனா) போல் நிறைய (சோக) சம்பவங்கள் நம்மை சுற்றி நடக்கும். அதை மோசமான நிகழ்வாக நினைத்து கவலைப்பட்டு மனம் குழம்பிவிடக்கூடாது. கலங்காமல் அதை ஆராய்ந்து பார்த்தால், தங்க விக்ரகம் போல் ஒரு பொக்கிஷம் அதனுள்ளே இருந்து நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    மனித சமூகம் கடந்த காலங்களில் எத்தனையோ நெருக்கடிகளை கடந்திருக்கிறது. இன்றும்.. இனியும் இதுபோன்ற எந்த நெருக்கடியாலும் உலக இயக்கத்தை நிறுத்தி விட முடியாது. இதுவும் கடந்துபோகும். அதேநேஇரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், அனுபவம் என்ற மிகப்பெரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் உருவாகும். நிறைய நல்லவைகளும் நடக்கும்.

    அந்த வகையில் இந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் எனது ஆலோசனையுடன் நடந்த மூன்று சம்பவங்களை அதற்கு உதாரணமாக சொல்கிறேன்.

    1. அவர்கள் இருவரும் கலைத்துறையைச் சேர்ந்த பிரபலமான தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். சிறு வயதிலேயே மகள்கள் கல்வி, கலை இரண்டிலும் சாதனையாளர்களாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில் கணவன்-மனைவி இடையே பணம் சம்பாதிப்பதிலும், புகழைத் தேடுவதிலும் யார் பெரியவர் என்ற ‘ஈகோ’ தலைதூக்கியது. கணவரை மட்டம் தட்டும் அளவுக்கு மனைவி நடந்துகொள்ள, மகள்கள் இருவரும் ‘அப்பா செய்வதுதான் சரி’ என்று கூற, வீட்டிற்குள் இரண்டு கோஷ்டிகளானார்கள்.

    அதனால் அவள் கணவரோடு மட்டுமின்றி மகள்களிடமும் பேசுவதைத் தவிர்த்தாள். மகள்களும் ஏட்டிக்குப் போட்டியாக முகத்தை திருப்பிக்கொண்டார்கள். வீட்டிற்குள்ளே பேசாமல் தனிமையை கடைப்பிடித்தார்கள். பின்பு இடைவெளியை உருவாக்கினார்கள். அந்த இடைவெளி பெரிதாகி விவாகரத்து செய்துகொண்டார்கள்.

    விவாகரத்து சூழல் மனதை வாட்டிவிடக்கூடாது என்பதற்காக வெளியூர், வெளிநாடு என்று கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொண்டு பறந்துகொண்டிருந்தனர். பிரிவைப் பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரமில்லை. கொரோனா பீதி உருவாகி, அவர்களை மூலையில் முடக்கியது. சிந்தனை சுழன்றது. ‘தங்கள் பக்கம் என்னென்ன தவறு?’ என்று ஒவ்வொருவரும் ஆத்ம பரிசோதனை செய்தார்கள். அவரவர் செய்த தவறு புரிந்தது. தனிமை வாட்டியது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை கொரோனா பயம் உணர்த்தியது. வெகு காலத்திற்கு பிறகு போனில் பேசினார்கள். மனம் நெகிழ்ந்தார்கள். இப்போது மீண்டும் சேர்ந்துவாழும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

    2. தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கும் அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. மனைவி பிரபலமான மருத்துவமனை ஒன்றில் காசாளர். நேரங் காலம் பார்க்காமல் உழைத்த மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து அதை உளறலாக கொட்டிவிட, அவள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் மகனையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். மருத்துவமனை அருகிலே தனியாக ஒரு வீட்டில் மகனுடன் வசித்துவந்தாள். கணவர், தனது உறவினர்கள் சிலரிடம் தொடர்ந்து அவளைபற்றி தவறாகப்பேச, அது அவளது காதுகளுக்கு செல்ல ஆவேசமானாள். அதிரடியாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விவாகரத்தும் பெற்றாள்.

    இரண்டு வருடங்களாக மனைவியை பற்றியும், மகனை பற்றியும் நினைக்காதவரை, கொரோனா தனிமை நினைக்கவைத்திருக்கிறது. ‘பழையதை எல்லாம் மறந்துவிட்டு மகனோடு வந்துவிடு. தனிமை என்னை தற்கொலை செய்யத் தூண்டுகிறது. ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்துவிட்டேன். இனியும் மது அருந்தமாட்டேன். உன்னை சந்தேகப்பட்டது என் தவறுதான்’ என்று மனமுருகி கண்ணீர் சிந்த, தனிமையில் தவித்துக்கொண்டிருந்த மனைவியும் அவரோடு சேர்ந்துவாழ தயாராகிவிட்டாள்.

    3. அவள் அரசியல் பின்னணி கொண்டவள். கணவர் அவளுக்கு பாதுகாவலர் போல் இருந்துகொண்டிருந்தார். மனைவி தனது ஒவ்வொரு நகர்வையும் தன்னிடம் சொல்லவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவளோ முன்னணி தலைவர்களுடன் சந்திப்பு, சுற்றுப்பயணம் என்று கணவரை கண்டுகொள்ளாமல் நடந்தாள். அதனால் இருவருக்குள்ளும் அடிதடி கலாட்டா உருவாகிவிட்டது.

    “இனிமேலும் நீங்கள் என்னை அடிப்பதை தாங்கிக்கொள்ள முடியாது. உங்களோடு என்னால் சேர்ந்துவாழ இயலாது. உங்களுக்கு தேவையான சொத்துக்களை எடுத்துக்கொண்டு எனக்கு விவாகரத்து கொடுத்துவிடுங்கள்” என்று மனைவி கணவரிடம் வக்கீல் மூலம் பேசி, பிரிவுக்கு தயாராக இருந்த நேரத்தில், சீனா செய்த புண்ணியம் கொரோனா வந்து அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. இப்போது இருவரும் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்துவிட்டதால் கோபம், குரோதத்தை கைவிட்டு, மனதொத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    முதல் கதையை திரும்பவும் ஒருமுறை படியுங்கள். ‘சிற்பம் உடைந்துவிட்டதே என்று வருத்தப்பட்டவர்கள், தங்க விக்ரகத்தை கண்டெடுத்துவிட்டோம் என்று மகிழ்ந்தது போல், கொரோனா பீதியால் பயந்த பலர் தங்க விக்ரகம் போன்ற வாழ்க்கையை (கொரோனாவால்) மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தத் தனிமை வாய்ப்பினை பயன் படுத்தி (பலவீனமாக இருந்த) உறவுகளையும் பலர் மீண்டும் பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    பாதிப்பு தரும் ஒவ்வொன்றுக்குள்ளும் பலவித பலன்களும் இருக்கும் என்பது உலக நியதி.

    -விஜயலட்சுமி பந்தையன்.

    Next Story
    ×