search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் குழந்தைகளை தாய் கவனிக்க வேண்டும்
    X
    பெண் குழந்தைகளை தாய் கவனிக்க வேண்டும்

    பெண் குழந்தைகளை தாய் கவனிக்க வேண்டும்

    பெண் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிக்கு செல்லும் வழி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் தாய் கண்காணிக்க வேண்டும்.
    பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப் புத் துறை அதிகாரி ஆர்.சுந்தர் கூறியதாவது:-

    மனம் விட்டு பேச வேண்டும்

    பெண் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிக்கு செல்லும் வழி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் தாய் கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனில் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பெற்றோர் அதிலும் குறிப்பாக தாயார் மனம் விட்டு பேச வேண்டும். தவறு நடந்ததை போன்று கேட்க கூடாது. பொதுவாக இன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதுபோன்று பொதுவாக விசாரிக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை குடும்பத்தில் ஏற்படுத்தும் போது தான் பாலியல் குற்றங்கள் நடந்திருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லி விடுவார்கள்.

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அடிக்கடி சென்று மாணவ-மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம். முதல் கட்டமாக பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நர்சுகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். ஒரு கிராமத்தில் சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்தால் அது பற்றி அந்த கிராம நிர்வாக அலுவலர் தான் முதலில் போலீசில் புகார் அளிப்பார். மேலும் அவர்களின் கவனத்துக்கு பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தால் அதை மறைக்காமல் உடனடியாக போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடந்தால் அதை மறைப்பதும் சட்டப்படி குற்றம்.

    முகாம்கள் மூலம் புகார்

    கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் போது தான் பெரும்பாலான சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பெற்றோர் புகார் அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை. பாலியல் குற்றங்கள் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கும் போதுதான் அதுபற்றி சிறுமிகள் புகார் அளிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலை அவர்களின் வீடுகளில் இருப்பது இல்லை. பள்ளிகளில் தவறான தொடுதல் என்றால் என்ன? என்பன போன்ற விழிப்புணர்வுகள் ஆசிரியைகளை கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.

    அடுத்த கட்டமாக ஊராட்சி தலைவருக்கும் விழிப்புணர்வு நடத்த உள்ளோம். பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இடைநிற்றல் போன்றவை பற்றி அவர்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×