search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்ப வன்முறை சட்டமும், பெண்கள் பாதுகாப்பும்...
    X
    குடும்ப வன்முறை சட்டமும், பெண்கள் பாதுகாப்பும்...

    குடும்ப வன்முறை சட்டமும், பெண்கள் பாதுகாப்பும்...

    கணவன், மனைவி இடையே ஆணவம் ஏற்பட்டால் கருத்து வேறுபாடு வந்து, வாய்ச்சண்டையில் ஆரம்பித்து கை கலப்பில் முடிந்து வன்முறையாகி விடுகிறது.
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனத் தெரியாமலா சொல்லிவைத்தார்கள். சுருதியும், லயமும் சேரும்போது இன்னிசை எழுவதைப் போல, கணவனும், மனைவியும் இணைந்து வாழும்போது தான் நன்மக்கட்செல்வங்கள் கிடைக்கின்றன.

    இசையில் முரண் ஏற்படுவதைப்போல, குடும்பத்திலும் அவ்வப்போது ஊடல்கள் வரலாம். அதை அவ்வப்போது அவர்களே நிவர்த்தி செய்துகொண்டால், வன்முறைகளே நடக்காது தவிர்க்கலாம். கணவன், மனைவி இடையே ஆணவம் ஏற்பட்டால் கருத்து வேறுபாடு வந்து, வாய்ச்சண்டையில் ஆரம்பித்து கை கலப்பில் முடிந்து வன்முறையாகி விடுகிறது.

    பெண்கள் படித்து, நல்ல பதவியில் அமர்ந்து, ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் போது, ஆண்களின் மனம் ஏற்பதில்லை. ஆண்களை விட, குடும்பச் சுமைகளை சுமக்கும் மனைவியால், கணவனின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளான மது அருந்துதல், பிற பெண்களை நாடுதல் போன்றவற்றை செய்யும்போது தான் பிரச்சினையே எழுகிறது. கல்வி, வேலை என எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்துப்போகும் கணவன், அவன் தவறினைச் சுட்டிக் காட்டும்போது, ஆணவம் ஏற்பட மனைவியை அச்சுறுத்துவது, இழிவாகப் பேசுவது, அவளது கண்ணியத்தைக் கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட, எல்லா மனைவியராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனம் நொந்து வேறு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை 2005-ம் ஆண்டு அரசு நடைமுறைப்படுத்தியது. இச்சட்டத்தின்படி கட்டிய மனைவியை விட்டு பிறர் மனைவியரை நாடும் ஆண்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497-ன் கீழ் விசாரணை செய்து தண்டிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ‘பிறன் மனை நயத்தல் பேதமையன்றோ’. மனைவி இருக்கும்போது விவாகரத்துப் பெறாமல் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்வது கூட பிரிவு 494-ன்படி தண்டனைக்குட்பட்டதே.

    அதைப்போல ஏமாற்றித் திருமணம் செய்தல், போலிச் சடங்குகளை நடத்தி திருமணம் என்று நம்ப வைத்தல் போன்றவைகளும் குற்றங்களே. பெண்களை துன்புறுத்தும் செய்கைகள் உடலாலோ, மனதாலோ, நோகும் படியான வார்த்தைகளாலோ அல்லது உடல், உயிர், உடலுறுப்பு அல்லது மன நலத்திற்கு கேடு செய்கிற எந்த ஒரு செயலுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கில்லை. மிரட்டி அவமதித்தல், உள் நோக்கத்துடன் அவமதிப்புச் செய்தல் ஆகியவைகளும் இச்சட்டத்தின் கீழ் குற்றங்களே.

    நாளேடுகளைப் புரட்டினால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், அதனால் பெண்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளும் நிறையவே. படிக்காத பெண்கள் மட்டுமல்ல; படித்த கல்லூரி ஆசிரியைகள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கூட தற்கொலை செய்வது தான் வியப்பு. முன்னோர்கள் வலியுறுத்திய ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற மரபு பிறழும்போது, குற்றமாகிறது. பிறர் மனைவியரை பெண்டாள நினைக்கும் கணவர் களவு வாழ்க்கை என்ற குற்றம் செய்தவராகிறார்.

    குடும்ப வன்முறை சட்டமும், பெண்கள் பாதுகாப்பும்...

    திருமண பந்தம் புனிதமான சடங்கு மட்டுமல்ல; சமுதாயத்தோடு ஒன்றியது. முறையான உறவில் பிள்ளைகள் பெறும்போது தான், பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாழ வேண்டும் என்றும் நினைப்பர். பெண்கள் நேரடியாக வழக்கு மன்றம் சென்று வாதாடி வாழ்க்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை.

    அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அல்லது சமூகநலப் பணியாளர்களிடம் எழுத்து மூலமாக தெரிவித்தால் போதும் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்த பதிவு செய்யப்பட்ட தன்னார்வ சேவை அமைப்பின் உதவியுடன், குற்றத்தின் தன்மை குறித்து விசாரணை செய்து, விசாரணை எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் மூலம், குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு அனுப்புவார்.

    அதை முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவர் அல்லது மாநகர குற்றவியல் நடுவர் விசாரணை செய்து குற்றத்திற்கேற்ற தண்டனை மற்றும் இழப்பீடு வழங்கி ஆணையிடுவார். கணவரால் அல்லது அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நிவாரணம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், ஜாமீனில் வெளிவர முடியாது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆகவே வன்கொடுமைகள் குறைய வாய்ப்புண்டு. இதை அறியாத பெண்களே தற்கொலை முடிவை நாடுகிறார்கள்.

    ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொண்டு பதிவு செய்துகொள்ளும் முறையை மாற்றி, இணங்கும்வரை இருவரும் சேர்ந்து வாழவும், இணங்காதபோது பிரிந்துகொள்ளும் முறையை மேலை நாடுகளில் கையாளுகிறார்கள். இந்த நாகரிக முறை ஐதராபாத், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பரவி இதுபோன்ற இணையர்கள் இருக்கிறார்கள்.

    இதிலும் பிரியும்போது, பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், நீதிமன்றம் மூலம் இந்தியாவில் நிவாரணம் பெற முடியாது. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ‘சேர்ந்து வாழும் அமைப்பில்’ பாதிப்படையும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க அந்நாடுகளில் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். வாழ்வதே குழந்தைகளுக்காக; அதை ஒழுக்கமாக வாழ்ந்து இல்லறம் நடத்தி நல்லறம் காப்பதே மாண்பு என்பதை இன்றைய இளந்தலைமுறையினர் உணர்ந்து வாழ்வதே நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

    கே.சுப்ரமணியன், வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை.
    Next Story
    ×