search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோபத்தை குறைக்க பெண்களுக்கு உதவும் வழிமுறைகள்
    X

    கோபத்தை குறைக்க பெண்களுக்கு உதவும் வழிமுறைகள்

    கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்... கோபத்தை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம்.
    * கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு... பொறுமையுடன் இரு... சாந்தமாக இரு’ எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.

    * சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்... கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.

    * சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும்.

    * கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன... எப்படி... எதனால்... யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.



    * காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    * கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.

    * பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.

    * மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்துவந்தால், மகிழ்ச்சியான சூழல் உங்களைத் தழுவிக்கொள்ளும்.

    * சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
    Next Story
    ×