search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தனிநபர் கடன் வகைகள்
    X

    தனிநபர் கடன் வகைகள்

    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரியுமா? நாம் நமது தேவைக்கு ஏற்ற தனிநபர் கடனைப் பெற்று பயனடையலாம். அது பற்றி...

    திருவிழாக் கடன்:

    விழாக்கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அதிகபட்சத் தொகை தேவைப்படாது என்பதால் இக்கடன் அளவு, ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவுதான்.

    இதற்கான கால அளவு ஓராண்டு ஆகும். வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இக்கடனில் குறைந்தபட்சத் தொகை ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சத் தொகை ரூ. 50 ஆயிரமும் ஆகும். 2 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமும், 3 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

    வீடு புதுப்பிப்பதற்கான கடன்:

    வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. இதிலுள்ள முக்கியமான அனுகூலம், இக்கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வரை வரிவிலக்கு வழங்கப்படுவதாகும்.

    வீட்டைப் புதுப்பிக்கப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகள், இதற்கான வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். முன்தவணைக் கட்டணம் கிடையாது.

    நிரந்தர விகிதக் கடன்:


    பெயருக்கு ஏற்ப, இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு இதன் முழுக் கால அளவுக்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கிய அனுகூலம், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

    இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



    நுகர்வோர் நீடிப்பு கடன்:

    வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.

    இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

    திருமணக் கடன்:

    ஒவ்வொருவர் வாழ்விலும் பெரிய செலவுகளில் ஒன்று, திருமணச் செலவு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு திருமணக் கடன் கைகொடுக்கிறது.

    இக்கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு, ஒன்று முதல் 5 ஆண்டுகள். வட்டிவிகிதம் 10.5 சதவீதம் முதல். குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். கடன் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாக இருக்கும்.

    விடுமுறை காலக் கடன்:

    விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறையச் செலவாகும். அதற்கு விடுமுறை காலக் கடன் உதவும். இக்கடன் வட்டி விகிதம் அதிகம் என்றபோதும், சம்பள உயர்வு அல்லது போனஸை பயன்படுத்தி கடனை விரைவில் அடைத்துவிடலாம். இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

    விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

    தொழில் கடன்:

    புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். நமது தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள். வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும்.

    இக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
    Next Story
    ×