search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    போலிக் அமிலம் பிறவி குறைபாடுகளை தடுக்குமா?
    X
    போலிக் அமிலம் பிறவி குறைபாடுகளை தடுக்குமா?

    போலிக் அமிலம் பிறவி குறைபாடுகளை தடுக்குமா?

    கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம் எனவும் மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
    நிற்பது, நடப்பது, உட்கார்வது, ஓடுவது என நமது உடல் இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை.

    அதைக் கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது என்பது முதன்மைக் கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே.

    மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டும் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற 3 அடுக்குப் பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையிலிருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல் மூளையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தை சீராக்கி பாதுகாக்கிறது.

    சில நேரங்களில் கர்ப்பபையில் கரு உருவாகும் தொடக்க நாள்களிலேயே ஒரு சிலருக்கு, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ, இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம். இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயத்துக்கும், வாழ்நாளின் பெரும்பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

    இவ்வளவு பிரச்சினைகளைத் தரக்கூடிய ஸ்பைனா பிபிடா எனும் நோய் வராமலேயே தடுக்க முடியாதா? என கேள்வி எழலாம்.

    அதைத்தடுப்பது எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் போலிக் அமிலம், நமது உடல் செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவிக் குறைபாடுகளை தடுக்கவும் உதவுகிறது.

    கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் மருந்தாவதால் ‘கருவின் தோழி’ என்று போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி’-வைட்டமின் கொண்டாடப்படுகிறது. ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், அதை ஈடுகட்ட பெண்களுக்கு போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம் எனவும் மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

    மேலும், “இரும்புச்சத்து - போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிகளுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது, இதனால்தான்,” என்றும் அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
    Next Story
    ×