search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப கால நீரிழிவு
    X
    கர்ப்ப கால நீரிழிவு

    கர்ப்ப கால நீரிழிவை எப்படி அறிவது?

    நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி. இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப்படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும்.
    கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப் படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும். நாளடைவில் நிரந்தர நீரிழிவும் உண்டாகலாம். கருச்சிதைவும் நேரலாம். அது மட்டுமல்ல... குழந்தைகளுக்கும் பிரச்னைதான். அளவு மீறிய எடையோடு பிறப்பு, குறைப் பிரசவம், சுவாசப் பிரச்னைகள் உண்டாகக் கூடும். சில குழந்தைகளுக்கு தாழ்நிலை சர்க்கரை அல்லது டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

    * இந்திய வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.

    * சர்வதேச வழிமுறைகளின் படி...

    உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.

    எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.

    சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.

    எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.

    கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.

    பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
    Next Story
    ×