search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவ வலி: புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்
    X
    பிரசவ வலி: புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

    பிரசவ வலி: புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

    பெண்களின் உடல் அமைப்பு சுகப்பிரசவத்திற்கு ஏற்றபடியே அமைந்திருக்கிறது. அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், பயமில்லாமல் இருந்தால், பெரும்பாலும் அதிக வலியில்லாமல் பிரசவம் சுகமாக நடந்துவிடும்
    கர்ப்பமடையும் நாளில் இருந்தே பெரும்பாலான பெண்கள் பிரசவ வலியை நினைத்து பயங்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களிடம் பயம் அதிகரிக்க சினிமா மற்றும் டெலிவிஷன் நாடக காட்சிகளும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலும் தாங்க முடியாத வலியில் கர்ப்பிணி துடிப்பது போன்று காட்டுவதால், தாங்களும் அதுபோல் பிரசவ வலியில் துடிக்க வேண்டியதிருக்கும் என்றே அனைத்து கர்ப்பிணிகளும் அச்சமடைகிறார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல என்பது மகப்பேறு மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ‘பெண்களின் உடல் அமைப்பு சுகப்பிரசவத்திற்கு ஏற்றபடியே அமைந்திருக்கிறது. அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், பயமில்லாமல் இருந்தால், பெரும்பாலும் அதிக வலியில்லாமல் பிரசவம் சுகமாக நடந்துவிடும்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பிரசவ வலி பற்றி மகப்பேறு மருத்துவர்கள் கூறும் தகவல்கள்:

    பிரசவ வலியானது இழுத்துப்பிடித்து பிறகு விடுபடுவதும், மீண்டும் இழுத்துப்பிடிப்பதும் விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை ஏற்படும். இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும். சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் அது பொய் வலியின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

    பனிக்குடம் உடைவதுதான் பிரசவம் நெருங்கிவிட்டதன் முக்கிய அறிகுறி. அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குட கசிவை உணர்ந்ததும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. தாமதித்தால் அது குழந்தைக்கு ஆபத்தாக முடியக்கூடும்.

    பிரசவ காலகட்டத்தில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. கர்ப்பப்பை வாயானது குழந்தையை வெளியே அனுப்பத் தகுந்தபடி விரிந்து கொடுக்கும்போது அந்தப் பகுதியில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு ரத்தப்போக்கு ஏற்படலாம். பிரசவம் நெருங்கும் நேரத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு என்பது அவசரகால சிகிச்சையாகக் கருதப்பட்டு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

    வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியையும் அசவுகரியத்தையும் உணர்ந்தால், அதுவும் பிரசவ வலி ஏற்படப்போவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாததுபோல உணர்ந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    பிரசவம் நெருங்கும் காலகட்டத்தில் எப்போதும் பெண்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு சென்றுவிடவேண்டும். பிரசவ வலியை பெண்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதுவும் தனது குழந்தை இந்த பூமியை எட்டிப்பார்க்க அந்த வலிதான் காரணமாக இருக்கிறது என்பதை உணரும்போது, வலியை மறந்து குழந்தையின் முகம் காண எல்லா தாய்மார்களும் ஆர்வமாக இருப்பார்கள்.

    வலியை குறைப்பதற்கோ, சுகப்பிரசவத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ மகப்பேறு மருத்துவர் தயாராக இருப்பார் என்பதால் எந்த கவலையும், பயமும் இன்றி பெண்கள் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×