search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாம்பத்தியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுகும் தம்பதிகள்
    X
    தாம்பத்தியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுகும் தம்பதிகள்

    தாம்பத்தியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுகும் தம்பதிகள்

    தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
    கணவன்- மனைவி இருவரும் அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தால் மட்டுமே, அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழு ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள்.

    தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. அதை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.

    தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு அழகையும், பாதுகாப்பையும் தருவது சருமம்தான். சராசரியாக ஒரு மனித உடலை, 20 சதுர அடி சருமம் மூடியிருக்கிறது. உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பங்கஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால்தான் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.

    ‘அதுதான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன் படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.

    ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.

    பெரும்பாலான தம்பதிகள் முத்தத்தோடுதான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய்தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையாக்கி விடும். வாய் துர்நாற்றத்தால் பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்றம் தாம்பத்திய ஆர்வத்தைக் குறைத்துவிடும். வாயில் பிரச்சினை இருந்தாலும், பற்களில் கேடு இருந்தாலும், வயிற்றில் கோளாறுகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று காரணத்தைக் கண்டறிந்து உடனே அதனை சரி செய்திடுங்கள்.

    தாம்பத்திய இன்பத்தை நன்றாக நுகர விரும்புகிறவர்கள் கைகளையும், கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கை, கால் நகங்களையும் வெட்டிவிட வேண்டும். நீண்ட நகங்கள், தம்பதிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கூர்மையான ஆயுதங்களாக மாறி, அவர்களை காயப்படுத்திவிடக் கூடும். கை நகங்களை வெட்டி, அழுக்குகளை நீக்கி பராமரிப்பது, குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அக்குள் மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை ‘ஷேவ்’ செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியை இளம் சுடுநீரால் அவ்வப்போது கழுவவேண்டும்.

    பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி பேடு’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும். சானிட்டரி பேடு மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உணவருந்திய பின்பு கையை கழுவுவது எப்படி அவசியமோ, அதுபோல் உறவு முடிந்த பின்பும் கணவன்-மனைவி இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்யவேண்டும்.
    Next Story
    ×