search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்?
    X
    பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்?

    பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்?

    மெனோபாஸ் காலத்தையொட்டித் தனக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, அசௌகரியங்களை அது மிகப் பெரிதாகும் வரை பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை.
    மெனோபாஸ் வரக்கூடிய காலகட்டத்தில் சிலருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. சிலருக்கு இது ஒரு கடுமையான காலகட்டமாக இருக்கலாம். மெனோபாஸையொட்டி சிலருக்கு ‘ஹாட் ஃபிளஷ்’ ஏற்படலாம். இரவில் தூக்கத்தில் திடீரென்று வியர்த்துக்கொட்டும். படபடப்பாக உணர்வார்கள். தூக்கம் வெகுவாகக் கெடும். சிலருக்குப் பிறப்புறுப்பு உலர்ந்து போகும்.

    இனப்பெருக்கக் காலகட்டத்தில் இருக்கும்போது, ஈஸ்ட்ரோஜன் சுரப்பால், பிறப்புறுப்பின் பாதை ஈரத்தன்மையுடன் இருக்கும். மெனோபாஸ் பருவத்தையொட்டி ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் இது ஏற்படும். அந்த நாட்களில் உறவில் ஈடுபடும்போது வலி உண்டாகலாம். பிறப்புறுப்பு ஈரப்பசையுடன் இருப்பதால், அந்தப் பகுதிகளில் உள்ள திசுக்களில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவால் கிருமித்தொற்று ஏற்படக்கூடும்.

    சிலருக்கு முடி அதிகமாகக் கொட்டும். உணர்வுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதை Mood Swings (உணர்வு ஊசலாட்டங்கள்) என்று சொல்வார்கள். கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, போன்ற உணர்வு ஊசலாட்டங்கள் மனத்தைப் பெரிதும் பாதிக்கும். மனச்சோர்வு வரும். தோல் உலர்ந்து போகலாம். மிகச் சோர்வாக உணரலாம். அடிக்கடி தலைவலி வரலாம். சிறுநீர்த்தடத் தொற்றுகள் வரலாம். மலச்சிக்கல் ஏற்படலாம்.

    பெண்களும் அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களும் மற்றவர்களும் ஏன் மெனோபாஸ் இப்படியெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்தில் மாதவிடாய்ச் சுழற்சியின் ஆரம்பத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், மெனோபாஸ் என்பதைப் பலரும், பெண்களை நாம் அரவணைத்துக் கொள்வதற்கான காலமாகப் பார்ப்பதில்லை.

    பெண்களும் மாதவிடாய் என்பது பேசாப் பொருளாக உள்ள சமூகத்தில், மெனோபாஸ் காலத்தையொட்டித் தனக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, அசௌகரியங்களை அது மிகப் பெரிதாகும் வரை பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை. ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்டீரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடியவை. மெனோபாஸ் காலத்தையொட்டி கருப்பை அவற்றைச் சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன.

    மன ஊசலாட்டத்தால் பெரிதாகப் பாதிக்கப்படும் நிலை வந்தால் அப்போதும் HRT சிகிச்சையை அளிக்கலாம். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டதுமே வேலை செய்ய ஆரம்பித்துவிடாது. பிரச்சினை சீராக ஒரு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட ஆகலாம். அதேபோல் மனரீதியான பிரச்சினைகளுக்கும் சிகிச்சை கொடுக்க வேண்டி இருந்தால் அதைக் கொடுக்க வேண்டும்.
    Next Story
    ×