search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து
    X
    கர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து

    கர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து

    கர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள் இவை இக்கால கட்டம் உள்ளடக்கியது.
    செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரம், கடந்த ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்விற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அவசியமான சூழல்!

    வறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும், அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது. இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி வயதுக்கேற்ற போதிய உயரமின்மை கொண்ட 46.6 மில்லியன் குழந்தைகளையும், உயரத்திற்கேற்ற போதிய எடையின்மை கொண்ட 25.5 மில்லியன் குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளது. யுனிசெப் அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு விதமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க அதிக உடல் எடை கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் இந்தியா தாயகமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான ஊட்டம் என்கிற இரட்டைச் சுமையைக் கொண்ட நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.

    இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கருத்தாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பஞ்சசீல கொள்கையை போன்று ஐந்து முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம், ரத்த சோகை மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, தனி மனித சுகாதாரம், சரிவிகித ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை.

    ஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரம்பிப்பது முதல் பிறக்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1000 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. இந்த ஆயிரம் நாட்களே ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை தீர்மானிக்கும் காலகட்டமாக, மறைமுகமாக ஒரு தேசத்தின் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முக்கிய நாட்களாக அமைகிறது.

    கர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, அத்தியாவசிய தடுப்பூசிகள், சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள், சுகாதாரம் என இவை அனைத்தையும் இக்கால கட்டம் உள்ளடக்கியது.

    பற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக்குறைவு, ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும்.

    குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது. நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எளிதாக செரிமானம் ஆகிறது. ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கிற அறியாமையின் காரணமாக பல தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கூடுதல் உணவுகளை ஆரம்பித்து விடுகின்றனர். மறுபுறம் ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் உணவுகளை வழங்க வேண்டிய அவசியம் குறித்த சரியான விழிப்புணர்வின்மையினால் குறிப்பிட்ட சதவீத தாய்மார்கள் இருப்பதும் நிதர்சனம்!

    முறையாக தாய்ப்பால் கொடுப்பது வயிற்றுப்போக்கை தடுக்கும். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழப்பதற்கு இந்த வயிற்றுப்போக்கே காரணமாகிறது. இதனை எளிமையாக மிக மலிவான விலையில் கிடைக்கும் உப்பு, சர்க்கரை கரைசலைக் கொண்டு பாக்கெட்டுகளை கொண்டு குணப்படுத்திவிடலாம் என்பது இன்னும் அனைவரையும் சென்று சேரவில்லை.

    ரத்த சோகையினால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, படிப்பில் கவனம் இன்மை, நெஞ்சில் படபடப்பு, சோர்வு, அன்றாட பணிகள் செய்ய இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சுண்டைக்காய், உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கோதுமை, பொட்டுக்கடலை, மீன், முட்டை, இறால் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சோகையைத் தடுக்கும்.

    பெ.உமா மகேஸ்வரி, துணை பேராசிரியர், ஊட்டச்சத்தியல் துறை, தனியார் கல்லூரி, சென்னை.
    Next Story
    ×