என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தற்போதுள்ள பெண்கள் உயர் இரத்த அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
    உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல் போன்றன ஏற்படும். கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது.

    இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.



    உணவுக் கட்டுப்பாடு :

    வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். முதலில் உண்ட உணவு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு அருந்துவது நல்லது, நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

    மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், கோப்பி, தேநீர் , அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தொடர் சிற்றின்பத்தில் ஈடுபடுவதும், எந்நேரமும் காம சிந்தனையுடன் இருப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், தீரா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது.

    எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் :

    உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு. இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.
    இன்றைய காலத்தில் கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.
    ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் ஓர் அற்புத தருணமே தாய்மை. ஒரு உயிரை உருவாக்கும் அதிசயம் கருவுருதல் ஆகும்.

    நவீன தொழில் நுட்ப வசதிகளும் பரிசோதனைகளும் புதிய உயரத்தினை எட்டியுள்ள இன்றைய காலத்தில் கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளும் செய்ய வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகள் குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.

    கர்ப்பம் அறிய சிறுநீர் பரிசோதனை :

    மாதம் மாதம் தொடர்ந்து சரியாக மாதவிலக்கு ஆகக்கூடிய பெண்களுக்கு ஒன்று, இரண்டு நாள் தள்ளிப் போனாலே கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிகாலை சிறுநீரைப் பரிசோதனை செய்வதே நல்லது. இப்பரிசோதனையில் ஹியூமன்கோரியானிக்கொன டோட்டிராபிக் ஹார்மோன் (Human Chorionic Gonadotrophic Hormone - HCG) சிறுநீரில் இருக்கிறதா? என்பதனைச் சோதிக்கப்படும்.

    கர்ப்பம் அறிய இரத்தப்பரிசோதனை அவசியமில்லை :

    சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வந்தால் இரத்தத்தில் உள்ள HCG ஹார்மோன் அளவினைப் பரிசோதித்து உறுதி செய்வது வழக்கம்.

    கர்ப்பத்தினை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் அவசியம்.

    கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் எடையானது அரைகிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடும். இருப்பினும் சிலருக்கு மசக்கை காரணமாக முதல் மூன்று மாதங்களுக்கு எடை குறையும். ஏற்கனவே எடை அதிகமாக இருந்த பெண்களுக்கு எட்டு கிலோ வரை எடை கூடலாம். கருத்தரித்தல் இருந்து பிரசவம் ஆகும் வரை மொத்தம் 10 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம்.

    இரத்த அழுத்தம் :


    இரத்த அழுத்தமானது 120/80 மிமீ மெர்க்குரிக்கு கீழ் இருந்தல் வேண்டும். ஆனால் 140/90மிமீ மெர்க்குரிக்கு மேல் இருந்தால் மிகவும் கவனம் தேவை. அடிப்படை இரத்தப் பரி சோதனை

    1. இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை :

    சிலருக்கு கர்ப்பம் ஆகும் முன்னரே நீரிழிவு நோய் இருக்கும். இப்படி ஏற்கனவே நீரிழிவு நோய் இருக்கும் கர்ப் பிணிகள், வெறும் வயிற்றில் இரத்த அளவு 90 மி.கி /டிஎல் எனவும், சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 120 மி.கி /டிஎல் மற்றும் HbAic 6.5% க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்.

    இதைத் தெரிந்து கொள்ள மருத்துவரின் முதல் சந்திப்பு அன்று நான்காவது மற்றும் ஏழாவது கர்ப்ப மாதங்களிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச் செய்து 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 140 மிகி /டெலிட்-க்கு மேல் இருந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.

    2. ஹீமோகுளோபின்: இது கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவு இரத்தம் உள்ளதா? என்பதைக் தெரிந்து கொள்ள உதவும்.

    3. இரத்த வகை மற்றும் ஆர் ஹெச் பிரிவு பரிசோதனை

    தாயின் இரத்தம் நெகட்டிவ் ஆகவும் இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு பிரச்சனை (RH incompatiblity) ஏற்படலாம். ஆகவே ஆர்எச் நெகட்டிவ் குருப் கர்ப்பிணிகள் முதல் கர்ப்பத்தின் போது பிரசவம் ஆகி 72 மணி நேரத்துக்குள் (அதாவது மூன்று நாட்களுக்குள்) தாய்க்கு ஆர்எச் இம்முனோகுளோபின் (Anh D) ஊசி போட வேண்டும்.



    தைராய்டு பரிசோதனை :

    கருவுற்ற இரண்டாம் மாதம் (8-வது வாரம்) இந்த பரிசோதனையினை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

    ஹெச்ஐவி (HIV) பரிசோதனை, விடிஆர்எல் பரிசோதனை (VDRL), ஹெப்படைட்டிஸ் B பரிசோதனை.

    கர்ப்பிணிகளுக்கு ஹெச்ஐவி, சிபிலிஸ், ஹெப்படைட்டிஸ் (மஞ்சள் காமாலை) ஆகிய நோய்கள் இருக்கிறதா? என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவசியம்.

    சிறுநீரில் புரதம் சர்க்கரை பரிசோதனை :

    சிறுநீரினை பரிசோதித்து புரதம் மற்றும் சர்க்கரையின் அளவானது கட்டுபாடான அளவுக்குள் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது அவசியம்.

    அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை (Ultra Sound Scan) :

    * கர்ப்பமுற்ற 8 முதல் 13 வாரத்துக்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்பட்டால் நியுக்கல் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதில் கருவில் ஒரு குழந்தையா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதா? பொய்க் கர்ப்பமா? போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

    * கர்ப்பமான 20 முதல் 22 வாரங்களில் குறைபாடுகள் கண்டறியும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இதில் கருவாக உள்ள குழந்தையின் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று அறியலாம்.

    * 32 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அல்ட்ரா சவுண்ட்ஸ்கேன் சோதனை செய்தவன் மூலம் கருவின் குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, கருவின் குழந்தையின் எடை கூடியுள்ளதா என்பதனையும் அறியலாம்.

    சிறப்புப் பரிசோதனைகள் :

    * கர்ப்பமுற்ற 11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் நியுக்கல் ஸ்கேன் செய்யும் போது கருவில் உள்ள குழந்தைக்கு டவுன் கினட்ரோம், டிரைசோமி போன்ற பிறவிக் கோளாறுகள் உள்ளதாக சந்தேகம் எழுந்தால் ஈஸ்டிரி யால் (estriol), HCG அளவு AFP, PAPP-A ஆகியவையும் செய்யப்படும் தேவைப்பட்டால் ஆம்நியோசின்ன சிஸ், கோரியானிக் வில்லஸ் சாம்ப்பிளிங் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * கருவில் உள்ள குழந்தைகளுக்கு எக்கோ (Fetal echo) கருவிலுள்ள குழந்தைக்கு பிறவிலேயே தோன்றக்கூடிய இருதயக்கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவுகிறது.
    அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.

    அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

    மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.

    அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.



    உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

    பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.

    ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
    பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம்.
    பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்கு...

    கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை…

    1) டிஸ்மெனோரியா
    - மாதவிலக்குப் பிடிப்பு

    2) பைப்ராய்ட்ஸ்
    - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

    3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்
    - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

    4) எண்டோமெட்ரியோசிஸ்
    - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.



    5) புரோலாப்ஸ்?
    - பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

    6) எக்டோபிக் கருவுறுதல்
    - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.

    7) ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது)
    - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ் , தொடர்ச்சியான ரத்தப் போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

    8) கர்ப்பப்பை புற்றுநோய்
    - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.
    கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும்.
    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.

    மேலும், தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் உடலில் உள்ள சக்தி வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் பிரசவத்தின் போது உடலில் இருக்க வேண்டிய நீர்த்தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும், கருவில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருக்க முடியாமல் விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.



    சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும். இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். ஆகவே, உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைத்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி, குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

    உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சினையை உண்டாக்கும். தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலும் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டால் தாய், சேய் ஆகிய இரு உயிருமே நலமாக ஆரோக்கியமாக இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க... குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!
    பிரசவ வலி என்பது பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள்.
    இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

    “பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது.

    ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது,அவசியமானதும்கூட!



    சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது.

    இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒருசில தவறுகளையும் செய்வார்கள். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் கொடிய தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின் போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள்.

    மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று தான் உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால், அதனாலேயே கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

    ஜங்க் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே மாதவிடாய் காலத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

    மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.



    பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள்.

    மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இக்காலத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

    யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்ப்பதே நல்லது.

    பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணி நோய்த்தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் உண்டாக்கும். ஆகவே இக்காலத்தில் துணிகளுக்கு பதிலாக சுத்தமான சானிடரி பேடுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
    மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.

    பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.

    இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.



    புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.

    நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.

    பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
    யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும். யோனியில் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.
    பெண்கள் தங்களின் யோனிப் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

    யோனிப் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால், அங்கு எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். உடலின் மற்ற உறுப்புக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பெண்கள் தங்களது யோனிப் பகுதிக்கு கொடுப்பதில்லை. ஆனால் யோனி ஆரோக்கியமாக இல்லாவிட்டால், தொற்றுக்களால் மலட்டுத்தன்மை மட்டுமின்றி, புற்றுநோய் கூட வரும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது யோனியில் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம்.



    எலுமிச்சை டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்ற யோனியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் யோனியில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் மற்றும் வறட்சி அடையாமலும் தடுக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் யோனியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள் மற்றும் யோனி வறட்சியடைவதைத் தடுக்கும்.

    முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது யோனில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் சக்தியைக் கொண்டவையாகும்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.
    பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.
    பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

    ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைபாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

    பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனை தீர்வு....

    * அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

    * இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

    * தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. எடுத்து அதை தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

    * நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

    * அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

    * மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

    * கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.
    காப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது. காப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம்.

    கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. காப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது. காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

    காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம்.

    எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில், நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு அகற்றுவது மிகவும் கஷ்டம்’. காப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள வேண்டியவை.

    காப்பர் டி போடுவதற்கு முன் கவனிக்கவேண்டியவை :

    * வயது, இது தான் முதல் முறையா என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
    * மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.
    * குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.
    * ரத்தம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

    காப்பர் டி யை அகற்றுவதற்கு முன்கவனிக்க வேண்டியவை :

    * காப்பர் டி நகர்ந்து இருந்தாலும், கண்டிப்பாக ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.
    * காப்பர் டி, கர்ப்பப்பைக்கு உள்ளே இருந்தால், மயக்க மருந்து கொடுத்துதான் எடுக்க வேண்டி இருக்கும். நோயாளிக்கு, வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில்கூட உயிர் பிரிய வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பைக்குள் சீழ் உண்டாகி, நோய்த் தொற்று வரலாம்.

    இதனால், அதிக வலி, ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் இருக்கும். கெட்ட வாடை வீசும். மேலும், அகற்ற முடியாமல் போனால், அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச்சென்று மயக்க மருந்து கொடுத்து, கர்ப்பப்பைக்குள் எண்டோஸ்கோபி மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்.

    * திருமணமாகாதவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் போடுவது இல்லை.

    * கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
    குழந்தையின்மைக்கு ஆண் - பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் - பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை இப்போது சமூகம் உணர்ந்திருக்கிறது. குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை.

    இந்த பிரச்சனையால் பிரிவு, இறப்பு, மனநிலை பாதித்தல் என இருந்த நிலைமை இப்போதில்லை. காரணம்... அபார மருத்துவ வளர்ச்சி. சரியான சிகிச்சை, திறமையான மருத்துவர், உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த தம்பதியும் குழந்தை பெற முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது.

    குழந்தையின்மைக்கு ஆண் - பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.

    பெண்களுக்கு:

    1. கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
    2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
    3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
    4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
    5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
    6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)

    ஆண்களுக்கு:

    1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
    2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
    3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
    4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
    5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
    6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
    7. விதை வளர்ச்சியின்மை.
    8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
    9. விரைவீக்கம், காசநோய்.
    10. அதிக வெப்பம், காற்று போகாத ஆடைகள்.

    சிகிச்சை முறைகள்:

    செயற்கை கருத்தரிப்பு:

    பரிசோதனைக் குழாய் முறை (டெஸ்ட்யூப் பேபி) எனப்படும் இதில் உயிரணு, கருமுட்டை இயற்கையான உறவில் சேர்ந்து கரு உருவாகாத சூழலில், அவற்றை வெளியே எடுத்து ஆய்வக குழாயில் வைத்து கருவாக்கப்படுகிறது. பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை வளரச் செய்யப்படுகிறது. 80ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற இந்த சிகிச்சை முறை இப்போது பரவலாக நடக்கிறது.

    வாடகை தாய்:

    தம்பதிகளின் உயிரணு - கருமுட்டை சரியாக இருந்தும் கருவை சுமக்கும் திறன் பெண்ணுக்கு இல்லாமல் போனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரமும் உள்ளது. அதன்படி, தம்பதியினரின் கருமுட்டை - உயிரணு சேர்த்த கருவை வாடகை தாயின் கருப்பையில் செலுத்தி பிரசவ காலம் முழுவதும் கவனித்து மருத்துவ உதவிகள் அளித்து குழந்தை பெறப்படுகிறது.

    அதற்கான ஊதியம் பெற்றதும் வாடகை தாயின் பணி முடிகிறது. தன் வயிற்றில் பிறக்காமல் போனாலும் முற்றிலும் அந்தக் குழந்தை தம்பதியுடையதுதான்.சரி, இதையும் தாண்டி சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மலட்டு தன்மையை நீக்க பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    கருமுட்டை உருவாக்கம் (ஓவலேஷன் இண்டக்ஷன்):

    ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்ட பெண்களுக்கான சிகிச்சை இது. இந்த ஹார்மோன் மருந்துகளால் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட்டு முழுமையான கருமுட்டை உருவாகச் செய்யும். இதன்மூலம் இயற்கையாக தம்பதியினர் குழந்தை பெற வழி ஏற்படும்.

    செயற்கை விந்தளித்தல்(ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்):

    இந்த முறையில் ஆணிடம் பெறப்படும் விந்தணுகளை சுத்தப்படுத்தி தரமான, உயிரோட்டமுள்ள, நகரும் தன்மை கொண்ட உயிரணுக்களை பெண்களின் கர்ப்ப பாதையில் செலுத்துவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்படும்.இதில் விந்து திரவத்தின் தேவையற்ற, ரசாயன பொருட்கள் நீக்கப்படுவதால் உயிரணுக்களின் முன்னேறும் தன்மை கூடும்.

    மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்துகளும் இந்த சிகிச்சையில் உதவும்.குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது நம்நாட்டில் பல மருத்துவமனைகள் உள்ளன.
    ×