என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.
    குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. 1990இல் குழந்தையின்மை சிகிச்சை 10% வெற்றிகரமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறி இருக்கிறது.

    இன்றைக்கு குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்த குறைக்கு தேவையான சிகிச்சையை செய்கிறார்கள். ஸ்கேனில் 3ஞி, 4D பாப்லர் (இரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பபையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம்.

    ஹிஸ்டெரோ சால்பின் ஜோக்ராம் (Hystero Salphingogram) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர்கோர்த்தல் ஆகியவைகளை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறை மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளை கண்டுபிடித்து அதற்கான சிசிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம்.

    ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கிறது. மருந்துகள் மூலமும் லேப்ரோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நீர்கட்டிகள், இரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவைகளை 3-D லேப்ரோஸ்கோபி, ஹிஸ்ட்ரோஸ் கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தலாம்.

    3D லேப்ரோஸ்கோபி முதல் முறையாக சென்னையில் பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் இரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை சரியான நிலைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3D விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.

    இவ்வாறு நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவிகித பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும்.

    மீதியுள்ள 10% பெண்களுக்கு IUI - கருப்பையில் விந்து செலுத்துதல் அல்லது டெஸ்ட்டியூப் பேபி (IVF/ICSI) விந்தை முட்டையில் செலுத்துதல் முறை தேவைப்படுகிறது. IUI ஆறுமுறை தோல்வி அடைந்தால் ICSI முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.

    1990 ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10% பெண்களுக் கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 60-85% வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும். என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும், முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்கு காரணம்.



    IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் கருவி முட்டையையும், கருவையும் நம் உடம்பில் இருக்கும் வெப்ப நிலையிலும், ஆக்சிஜென் போன்ற வாயுக்களையும் நம் உடம்பில் இருக்கும் நிலையிலேயும் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    இதை தவிர லேசர் கணிணி முறையை உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5வது நாள் கருவை (பிளாஸ்போசிஸ்ட்) கர்ப்பபையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும்.

    முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன. எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டை தான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருந்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது.

    ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால என்ற முறையை கடைபிடித்த பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையும் உள்ளன. இதை தவிர மிகவும் அதி நவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்பியூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலமாக 7000 மடங்கு பெரிதாக பார்த்து மிகவும் சிறப்பான விந்தை தேர்வு செய்யலாம்.

    சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவை தேர்ந்தெடுப்பது எப்படி?

    எம்ப்ரியோஸ்கோப் என்பது மிகவும் அதிநவீன கருவி, இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்ய உதவுகிறது. இதனால் வளர்ச்சியில் குறை இருந்தால் அதை கண்டுபிடித்து கருப்பையில் செலுத்துமுன் சிறந்த கருவை தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10-12% அதிகமாக்கலாம்.

    கர்ப்பப்பையின் உட்புற சுவரின் ஒட்டும் தன்மையை அதிகரிப்பதற்கு எம்ப்ரியோக்ளு எனும் பசை உள்ளது. இதை தவிர ஹிஸ்டெரோஸ்கோப்பி மூலம் கர்பப்பையின் உள் பகுதியை நோக்கி ஸ்கிராட்ச் டெஸ்ட் மூலம் சிறு அளவில் சதையை சுரண்டி எடுப்பதால் வளர்ச்சிக் காரணிகள் அதிகரித்து கரு கருப்பையில் ஒட்டி வளருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. என்பதை அனுபவத்தால் கண்டுபிடித்துள்ளோம்.

    இவ்வாறு விந்து, கரு, கருப்பை ஆகியவைகளின் ஆரோக்கியம் நவீன சிகிச்சை முறைகளாலும் நவீன சாதனங்களாலும் சிறப்பாக்கப்படுவதால் கர்ப்பமாகும் வாய்ப்பு 10-20% உயர்கிறது. கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 10% குறைகிறது.

    இந்த எம்ப்ரியோஸ்கோப் என்னும் கருவி உலகிலேயே நம் மருத்துவ மையத்தை சேர்த்து மொத்தம் 125 மையங்களில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்களுக்கு அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும், சிகிச்சை ஆரம்பித்து விட்டால் அடுத்தடுத்து இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.

    - டாக்டர் கீதா ஹரிப்பிரியா
    தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.
    ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வருவதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும்.

    உணர்ச்சி வசப்படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆராய்ச்சியில் ஆண்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிக பட்சம் 30 நொடிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை.

    ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும். ஒரு மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கினால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும். மனைவியை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஃபோர் பிளே எனப்படும் உடலுறவுக்கு முந்தைய தூண்டுதல் முக்கியம். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செயல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும்.



    எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடிக்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு.

    ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடுவார்கள். பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவது கடினம். அன்று அவர்கள் வருத்தப்படும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனைவியை திட்டிவிட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்திருப்பவர்கள் அதிகம். செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மனநிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்கலை. மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலையை அறிந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மனைவி விருப்பத்தில் உள்ளாரா? இல்லையா? இதைத் தெரிந்துகொள்ள சிக்னல்கள் உதவும். மனைவிக்கு சில நேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.
    கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீரகம் பூரண ஆரோக்கியத்தோடு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் சுகப்பிரசவம் நடைபெற சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம்.
    உடலிலுள்ள கழிவுகளை ரத்தத்திலிருந்து சுத்திகரிப்பது, நச்சுப் பொருட்களை போராடி வெளியேற்றுவது போன்றவை தான் சிறுநீரகத்தின் சீரிய வேலையாகும். இதனால் தான் மனிதனுக்கு ஒன்றுக்கு இரண்டாக சிறுநீரகத்தை இறைவன் படைத்திருக்கிறான். சிறுநீரக பாதிப்பை 5 நிலைகளாக பிரிக்கிறார்கள்.

    இதில் சிறுநீரகத்தில் வடிகட்டும் வேலையை நெப்ரான்கள் செய்கின்றன. இதன் திறன் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதுதான் 5-ம் நிலை பாதிப்பு எனப்படுகிறது. இந்த 5-ம் நிலையின் போது தான் சிறுநீரக பாதிப்பு வெளியே தெரியத் தொடங்கும்.

    சீரான இடைவெளியில் உடல் பரிசோதனைகள் செய்வதன் மூலம் முதல் நிலை பாதிப்பிலேயே உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். 50 வயதை கடந்தவர்கள் மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வது முக்கியம். ரத்த அழுத்தம் சீராக இருந்தால், சிறுநீரகத்துக்கு பாதிப்பு இல்லை.

    தினமும் ½ லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறுவது இயல்பான ஒன்று. அதைவிட அதிகமாகவோ குறைவாகவோ போனால் மருத்துவ பரிசோதனை அவசியம். சர்க்கரை நோயாளிகள் ‘சுகர் பிரீ‘ மாத்திரைகளை பயன்படுத்துவது சிறுநீரகத்துக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு மீறினால், ‘ஞாபக மறதி‘ பிரச்சினை ஏற்படலாம்.



    எந்த நோய்க்கு டாக்டர் மருந்து கொடுத்தாலும், அந்த மருந்து இதயம் மற்றும் சிறுநீரகத்துக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது தானே என்று தயங்காமல் கேட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால் இன்று பல நோய்களுக்கு கொடுக்கும் மருந்துகளில் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு பக்கவிளைவுகளை கொடுக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளன.

    கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீரகம் பூரண ஆரோக்கியத்தோடு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் சுகப்பிரசவம் நடைபெற சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். உணவில் அரிசி உணவை குறைத்து தினமும் ஒருவேளையாவது கோதுமை உணவை எடுத்துக்கொள்ளலாம். பீன்ஸ், அவரைக்காய் இரண்டும் சிறுநீரகத்துக்கு சிறந்த நண்பர்கள். கீரைகளும் பங்காளிகள் தான். இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் ஆரோக்கியம் பெறும்.

    சிகரெட்டும், ஆல்கஹாலும் ரத்தத்தின் சுத்தத்தைக் கெடுக்கும். அதனால் சிறுநீரகம் ஓவர் டைம் வேலை செய்யும். தொடர்ந்து மதுவும், சிகரெட்டும் எடுத்துக்கொள்பவர்களின் சிறுநீரகம் திணறும். அவற்றை கைவிடுவது சிறுநீரகத்துக்கான மிகப்பெரிய நன்மை.

    தினமும் 40 நிமிடம் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கும். ரத்தம் சீராக ஓடிக்கொண்டிருந்தால் சிறுநீரகம் சுகமாக இயங்கும்.
    பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.
    பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

    சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் ஆண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏன் உடல் எடை கூடுகிறது ஏன் தெரியுமா? ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

    இதனால் சும்மா வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும். அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

    அப்படி எந்த ஹார்மோன்கள் உங்கள் உடல் எடை கூட காரணமாகும் என தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.

    பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைதான் ஹைபோதைராய்டிஸம். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை உண்டாகும். தைராய்டு குறைவினால் வளர்சிதை மாற்றம் குறைந்து கொழுப்பு செல்கள் திசுக்களிலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. எதிர்மாறாக தைராய்டு அதிகரித்தால் உடல் எடை மிகவும் குறைந்துவிடும்.



    ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பாலின ஹார்மோன். இது சுரக்கும் வரை பல ஆபத்தான நோய்களிலிருந்து பெண்களை காப்பாற்றும். ஆனால் மெனோபாஸுக்கு பிறகு இது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கலோரிகளை கொழுப்பாக மாறி உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

    மெனோபாஸ் சமயத்தில் இந்த ஹார்மோனும் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.

    சில பெண்கள் PCOS எனப்படும் கருப்பை நீர்கட்டி பாதிப்பு இருக்கும். அதாவது கருப்பையில் நிறைய நீர்கட்டிகள் உருவாகி, மாதவிலக்கை சீரற்றதாக்கிவிடும். இதனால் உடல் பருமன், முகத்தில் நிறைய முடி ஆகியவை உண்டாகும். இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் அதிகரிப்பதால்தான். இதனால் ஹார்மோன் சீராக இல்லாமல் உடல் பருமனை தந்துவிடும்.

    இன்சுலின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை ஒழுங்குபடுத்த தேவையான ஹார்மோன். அது குறையும்போது அதிக குளுகோஸ் அளவு அதிகரித்து கொழுப்பாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும்.

    கார்டிசால் அதிகரிக்கும்போது பசி அதிகரிக்கும். தூக்கமின்மையும் உண்டாகும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டது. இதற்கு கார்டிசால் ஹார்மோன் அதிகரிப்பதும் காரணமாகும்.
    திருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.
    இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொண்டுவரும் உடல்நலப் பிரச்சினைகள் முந்தைய காலக்கட்டத்தை காட்டிலும் முற்றிலும் வேறானவை. பெண்கள் பருவமடைகிற வயது குறைந்துகொண்டே இருக்கிறது. இது இளம் சிறுமிகளை கடுமையான மனநெருக்கடிகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. அவர்கள் மாதவிடாய் கால கட்டத்தில் சுகாதாரத்தில் கவனம் செலுத்தவும் தவறான நபர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    உரிய வயதிற்கு முன்பே பருவமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களும்கூட இதனால் வருத்தமடைகின்றனர். உடலின் வேகமான வளர்ச்சி, அதிக அளவிலான அல்லது தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாத காரணங்களால் உரிய வயதிற்கு முன்பே பருவமடைய நேரிடுகிறது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் கட்டிகள் உருவாவதாலும் முன்கூட்டியே பருவமடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாகவே குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைகின்றனர்.

    தற்போதைய கல்வி முறைகள் காரணமாக அதிக நேரம் படிக்க வேண்டி இருப்பதால் இயல்பிலேயே குழந்தைகளுக்கு போதுமான அளவில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. மிகவும் தாமதமாக தூங்கச் செல்வதும், தாமதமாக விழித்து எழுவதும் உடல் கடிகாரத்தின் சமநிலையை பாதிப்பதோடு, ஹார்மோன்களின் சமச்சீரான இயக்கத்திலும் பாதிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித சமுதாயம் எண்ணற்ற வகைகளில் பயன்களை அடைந்திருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வீடியோ கேம் விளையாட்டுகள், சமூக ஊடகங்கள் ஆகியவை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதனால் மேலே குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதோடு, அருகில் இருக்கும் குடும்பத்தினேரோடு செலவிடும் நேரமும் குறைந்து போகிறது. சமூக ஊடகங்களின் வழியாக அறிமுகம் இல்லாதவர்களோடு நட்புகொள்ளும்போது சிக்கல்களை சந்திக்க வேண்டிய ஆபத்தும் இருக்கிறது. இவையெல்லாம் உடலில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளால், ஹார்மோன்களின் சமச்சீர் இயக்கம் மேலும் மோசமான நிலையை அடைகிறது.

    வளரிளம் பருவத்தில் செய்துகொள்ளும் சோதனையில் ரத்தச் சோகை, எடை பிரச்சினைகள், தைராய்டு மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரிக் சின்ட்ரோம்(கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்), ஹார்மோன் கோளாறுகள் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கர்ப்பப்பையில் பல கட்டிகள் இருக்கும் பிரச்சினை பத்தில் மூன்று பேருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கான சோதனையின்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ரூபெல்லா மற்றும் சின்னம்மை வைரஸ்களின் தாக்குதல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

    எதிர்காலத்தில் பெண்களின் வாழ்க்கை தேவைகளுக்கு ஏற்றவகையில் இளம்வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்கு வளரிளம் பருவ சோதனை நல்லதொரு வாய்ப்பாகும். பாரம்பரியமாக, இந்த பாதுகாப்பு முறைகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களால் தேவைக்கு ஏற்றபடி செய்துகொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இளம்வயதினர் உடல்நலத்திற்கு உகந்த வாழ்க்கை முறையிலிருந்து திசை திரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டிருப்பதால் அவர்களின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

    திருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களால் இயற்கையாக கருவுற இயலாதபோது மருத்துவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் சோதனைகள் செய்துகொள்வதன் மூலம் திருமணத்திற்குப் பின்னால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு கவலைகளையும் தவிர்க்கமுடியும்.



    குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் கருத்தரிப்பதற்கு முன்பான சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இச்சோதனையானது கர்ப்ப காலத்தின்போது தாய் சேய் நலத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கும் ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கும் உதவுகின்றது.

    கருத்தரிப்புக்கு முந்தைய மருத்துவ ஆலோசனையால் கர்ப்பக் காலத்தின்போது கடுமையான முடிவுகள் எடுப்பதையும் வருந்தத்தக்க நிகழ்வுகளையும் தவிர்க்கமுடியும். ஆனால் இந்தியாவில் இச்சோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் ஏறக்குறைய 90 சதவிகித கருத்தரிப்புகள் திட்டமிடப்படாமலேயே நிகழ்கின்றன.

    வீட்டிலேயே செய்துகொள்ளப்படும் சோதனையின் மூலம் கருத்தரிப்பை உறுதி செய்துகொண்டவுடன் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது தற்போது நடைமுறையில் இருந்துவருகிறது. கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் செய்வதை மிகையாக கருதக்கூடாது. தாய், சேய் இருவரின் நலத்திற்கும் அது மிகவும் அவசியமானதாகும்.

    பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலையை பார்க்கமுடிகிறது. முழுக்கவனமும் குழந்தைகளின் மீதே இருப்பதால் பெரும்பாலும் தாயின் உடல்நலத்தின் அக்கறை காட்டப்படுவதில்லை. தாயின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால், தாய்மார்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, தன்னுடைய உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

    ஏதாவது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே மருத்துவ உதவியை நாடுவது வழக்கமாக இருக்கிறது. உடல்நலம் நல்ல நிலையில் இருந்தாலும்கூட நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்வதற்கு பரிசோதனைகள் செய்துகொள்வதே சரியான அணுகுமுறை. வாழ்க்கைமுறையினால் ஏற்படக்கூடிய நீரிழிவு, கொழுப்பு, மிகை ரத்த அழுத்தம் மற்றும் சிலவகையான புற்றுநோய்களின் அறிகுறிகளை வளர்ந்த நிலையிலேயே தெரிந்துகொள்ள முடிவதால் இத்தகைய சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.

    முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அடிப்படையான உடல்நல சோதனைகள், ரத்த சோகை, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான சோதனைகள், மார்பக மற்றும் கர்ப்பப்பை சோதனைகள் (ஸ்கேன் மற்றும் பாப் ஸ்மியர்) உள்ளிட்ட முழுமையான உடல் சோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் அதை உறுதிசெய்து கொள்ளவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும் அச்சோதனை உதவியாக இருக்கும். பிரச்சினையை உடனடியாக தெரிந்துகொண்டால் பிறகு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளை எளிதாக தவிர்க்க முடியும். வருமுன் காத்துக்கொள்வதே என்றென்றும் சிறந்த வழிமுறை.

    பெரும்பாலான பெண்கள் தங்களது கடைசி பிரசவத்திற்குப் பிறகு மெனோபாஸ் காலக்கட்டத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மனோநிலை பாதிப்புகள், உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    அந்தக் காலக்கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போல நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு கோளாறுகளால் மாதவிடாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எலும்புகள் பலம் இழக்க ஆரம்பிப்பதால் சத்தான உணவுடன் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்களையும் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ச்சியான உடற்பயிற்சியும் மன அழுத்தம் குறைப்பதற்கான முயற்சிகளும் இந்த காலக்கட்டத்தில் அவசியமானவை. ஏனெனில் வாழ்க்கையின் சவால்கள் இந்தக் கட்டத்தில் உச்சத்தை எட்டி, மனதின் சமநிலையை தடுமாறச் செய்யும்.

    டாக்டர் கவுரி மீனா, தாய்மை நல நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை
    பெண் குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது முதிர்ந்து, காலம் முடியும் வரை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.
    வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பெண்களின் நலம், கல்வியறிவு, சமுதாயத்தில் பங்கு இவை அனைத்துமே இன்று முக்கியமான அம்சங்களாக இருக்கின்றது. எல்லா செல்வத்தையும் விட முக்கியமானது உடல் ஆரோக்கியம்தான். பெண் குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது முதிர்ந்து, காலம் முடியும் வரை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்த மாற்றங்களை சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் நலனை பாதுகாக்க இன்று மருத்துவ துறையில் பல்வேறு சிகிச்சைகளும், மருத்துவத்தில் பல்வேறு பரிசோதனைகளும் முன்னேற்றம் கண்டுள்ளது.

    குழந்தைப் பருவத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளும் சரிவிகித உணவும் பழக்க வழக்கங்களும் மிக முக்கியமாக பங்கு வகிக்கின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வியுடன் கூடிய விளையாட்டும் நோய் தடுப்பு மருந்துகளும்எல்லாவற்றிற்கும் மேலான (Personal Hygenic) என்று சொல்லப்படும் தன் சுத்தம் சுகாதார முறைகளும் முக்கியம் என்று கருதப்படுகிறது.

    பூப்படையும் பெண்களுக்கு நிச்சயமாக உடல் ரீதியான மாற்றங்களையும் அதனடிப்படையில் உருவாகும் மன ரீதியான மாற்றங்களையும் சமாளிப்பதைப் பற்றி ஒவ்வொரு தாயும் ஆசிரியர்களும் முக்கியமான அறிவுரைகளை சொல்வது மட்டுமல்லாமல் அன்பு, அரவணைப்புடன் கூடிய சூழலை உருவாக்கித் தருவது மிக மிக முக்கியமானதாகும்.



    பொதுவாக வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறு, உதிரப்போக்கு, மார்பகக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றில் பள்ளி சிறுமியர் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். அதனால் தேவையான அளவு தண்ணீர் காய்கறி பழங்களுடன் கூடிய புரதச்சத்துமிக்க உணவு முறைகள் மிகவும் நல்லது. வெளியே சாப்பிடுவதையும் (Junk food) என்று சொல்லக்கூடிய (Pizza, Burger, Sweets, Cake, Chocolatge, Chicken) போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது மிக மிக நன்று.

    15 முதல் 25 வயது வரையுள்ள பெண்களுக்கு ரூபெல்லா, கருப்பை புற்றுநோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தையின்மைக்கு இன்று நவீன சிகிச்சைகளும், அதிக வெற்றிவாய்ப்பைத் தரக்கூடிய மருத்துவ முறைகளும் உருவாகிக் கொண்டு இருக்கிறது. பெண்களின் உடலில் கருப்பை, கருமுட்டையை, சினைக்குழாய் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள (Scan) பரிசோதனை முறை முக்கிய அங்கமாக செயல்படுகிறது.

    Laproscopy என்று சொல்லக்கூடிய சிறுதுளை (En-doscopy) சிகிச்சை முறை பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதன் மூலம் பெண்களுக்கு கருப்பை கட்டிகள், கருமுட்டை கட்டிகள், சாக்லேட் சிஸ்ட் போன்ற பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை முறை இல்லாமல் சிறுதுளை (Laproscopy) முறை மூலமாக சிகிச்சைப் பெற்று ஒரே நாளில் வீட்டிற்கு செல்வதும் இயற்கையாகவே கருத்தரிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. அடிக்கடி கருச்சிதைவு (Abortion) ஆகும் பெண்களுக்கு கருச்சிதைவை தடுக்கக்கூடிய சிகிச்சை முறைகளும் மற்றும் பரிசோதனை முறைகளையும் மேற்கொண்டு பெண்களுக்கு அதிக குழந்தைப் பேற்றையும் கொடுக்கிறது.

    மகப்பேறு சிகிச்சையில் தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் இரத்த ஓட்டத்தை தெரிந்து கொள்ளவும், பிரசவ காலத்தில் நல்ல ஆரோக்கியமான தாய், சேயைப் பாதுகாக்கும் முறைகளும் இன்று முன்னேற்றம் கண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

    பெண்கள் நலனும் குடும்ப நலனும், குழந்தைகள் நலனும் கருத்தில் கொண்டு கருத்தரித்தல் மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 30 வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணும் வருடம் தவறாமல் (Pap Smear) எனும் கருப்பை புற்றுநோய் முன்னறியும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது மட்டுமல்லாமல் ரத்த சோகை வராமல் தடுத்து ஆரோக்கியத்தைப் பேணிகாக்க வேண்டும்

    மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்கள், உடல் பருமன், ரத்தத்தில் உயர் அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், இருதய கோளாறுகள் போன்றவற்றை தவிர்க்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.

    அன்றாடம் நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும், காய்கறி பழங்கள் சேர்ந்த மிதமான உணவுப்பழக்கமும், கால்சியம் சத்து நிறைந்த (பால், கீரை, பயிறு, பருப்பு வகைகள்) மிகவும் நல்லது.
    ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும்.
    ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும்.

    அந்த வகை மாற்றத்தின் அடிப்படையில், பெண்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். அந்த குழுக்களில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றத்தை பற்றி காண்போம்.

    பெண்கள் முதல் குழுவில் 12- 28 வயது வரை உள்ளவர்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகப்பரு, ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த சோகை, முகத்தில் முடி மற்றும் தைராய்டு கோளாறுகள் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

    ஏனெனில் இந்த வயதிற்குட்பட்ட பெண்கள் பெரும்பாலும் சமூகதளத்தில் அதிக நேரம் செலவழிப்பதால், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைக்கு ஆளாகின்றார்கள்.



    பெண்கள் இரண்டாம் வகையில் 28-47 வயது வரை உள்ளவர்கள். இந்த வகை பெண்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலையை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.

    இதனால் இவர்கள் அதிக களைப்பு, வீக்கம் அடைந்த நார்த்திசுக்கட்டிகள், பருத்து சுருண்ட நரம்புகள், மூட்டு பிரச்சனைகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    பெண்கள் மூன்றாம் வகையில் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள். இந்த வகையில் உள்ள பெண்கள் ஹார்மோன்கள் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    ஏனெனில் இந்த வயதில் இவர்களுக்கு மாதவிடாய் நின்று, மன அழுத்தம், மூட்டு வலி, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படுகிறது.

    மூன்று விதமான வகையில் உள்ள பெண்கள் உடல் மற்றும் மனம் ரீதியான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு, தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.
    வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன.
    வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. வீட்டு நிர்வாகத்தின் அடிப்படை விஷயங்களில் தொடங்கி, குடும்ப உறுப்பினர்களின் ஒவ்வொரு தேவையையும் கவனித்துகொள்வது வரையில் அவர்களது பொறுப்பாக இருக்கிறது.

    அன்றாட வீட்டு வேலைகள் சரியான நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நாள் முழுதும் இல்லத்தரசிகள் ‘பிசியாக’ இருப்பது வழக்கம். ஒரு குடும்பத்தின் முதுகெலும்பாக கருதப்படுவதால், அவர்களுக்கான பொறுப்புகளை மன அழுத்தம் இல்லாமல் செய்வது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சில இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு காரணமாக மனச்சோர்வு உண்டாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளில் சில முக்கியமான பகுதிகளை இங்கே கவனிக்கலாம்.இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சின்னச்சின்ன பாராட்டுக்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

    அதன் காரணமாக அவர்களது மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. தொடந்த வீட்டு வேலைகள் காரணமாக சோர்வும், உடல் தளர்வும் ஏற்படுகின்றன. மருத்துவ விடுப்பு அல்லது தற்காலிக விடுப்பு என எதுவுமின்றி வருடத்தின் அனைத்து நாட்களும் இல்லத்தரசிகள் உழைக்கிறார்கள்.



    நாள்பட்ட மன உளைச்சல்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட காரணிகளின் வெளிப்பாடு ஆகியவை காரணமாக சில பெண்களுக்கு ஏற்படும் மன இறுக்கம் காரணமாக உடலிலும் பாதிப்புகள் ஏற்படலாம். அதன் காரணமாக மனதில் காரணமற்ற கோப உணர்வுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    ஒரு நாளுக்கான வீட்டு வேலைகள் பட்டியலை தயார் செய்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் பிறருடன் பழகவும், இளைப்பாறவும் முயற்சி செய்வது மன உளைச்சலை குறைக்கும்.

    மன இறுக்கத்தை சரிசெய்ய உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். ஆற்றலை அதிகப்படுத்தி, சோர்வை குறைக்கும் உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். தினமும் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    நல்ல அமைதியான தூக்கம் என்பது மன இறுக்கத்தை போக்கும் சிறந்த மருந்தாகும். தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து, அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும். எனவே, தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது முக்கியம்.

    தியானம், யோகா அல்லது சுவாச பயிற்சி போன்ற இளைப்பாறல் நுட்பங்களை முயற்சி செய்தால், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவை தீர்ந்து மகிழ்ச்சியான நல்ல உணர்வுகளை அதிகரிக்கும். மன இறுக்கத்தின் அறிகுறிகள் அதிகமாக ஆகும் போது அதற்கான நிபுணரிடம் உதவியை நாட வேண்டும்.
    குழந்தை பெற்றெடுத்த பின் உடல் சத்து இழப்பு மற்றும் உடல் பலகீனம் போக்கவும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து பெறவும் முறையான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.
    தாய்மை ஒரு பெண்ணின் வாழ்வை முழுமையடைய செய்கிறது. குழந்தையை பெற்றெடுக்கும் தருணம் முதல் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி அவன் ஆசைகளை நிறைவேற்றி அவன் வாழ்வில் வெற்றி பெறுவதை காணும் வரையில் அவள் தாய்மை உணர்வு சிறு அளவும் குறைவதில்லை.

    அத்தகைய தாய்மையை பெற்ற பின் பெண்கள் தங்கள் உடல் நலத்தையும் பேணி பாதுகாப்பது வேண்டும். ஏனெனில் குழந்தையை பேணி பாதுகாக்கும் பெண்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை கொள்ளாது பலவிதப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றனர்.

    குழந்தை பெற்றெடுத்த பின் அவளுக்கு ஏற்படும் உடல் சத்து இழப்பு மற்றும் உடல் பலகீனம் போக்கவும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து பெறவும் முறையான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பிரச்சினைகளை களைய முடிவதுடன், நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தையை பராமரிக்கவும் முடியும். அருந்தவம் பெற்று அன்னையாய் மாறிய பின் நலம் தரும் ஊட்டச்சத்து உணவே அவர் நலம் பேணும் என்பதே உண்மை.

    பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகள் :

    பிரசவத்திற்கு பின் தாயானவள் பல மாறுதல்களை அதாவது உடல் ரீதியாக, மன ரீதியாகவும் அடைகிறாள். எனவே அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். குழந்தையை தாயும், அவளது உற்றார் உறவினர்களும் கனிவுடன் கவனிப்பது போல், தாயையும் நல்ல ஓய்வெடுக்க செய்து, ஊட்டச்சத்து உணவுகளை அளித்து பாதுகாத்திட வேண்டும்.

    உணவுகள் என்பது குழந்தைக்கு தாய்ப்பாலை பெருக்கு விதமாகவும், பிரசவ வலி மற்றும் காயங்கள் சீக்கிரமே ஆறும் விதத்திலும் அமைந்திட வேண்டும். பெரும்பான்மையான மருத்துவர்கள் பிரசவித்த தாய்மார்கள் பசிக்கின்ற போது எல்லாம் உணவுகளை உட்கொள்வது அவசியம் எனக் கூறுகின்றனர்.

    புரத சத்துள்ள உணவுகள் :

    ஒரு நாளைக்கு 3 முதல் நான்கு அவுன்ஸ் அளவு புரத சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் நான்கு அல்லது ஐந்து முறை பால் பொருட்களையும் உட்கொள்ளுதல் வேண்டும். பால் பொருட்கள் புரதச்சத்தை தருவதுடன் கூடுதலாக கால்சியம் சத்தை பெறவும் உதவி புரிகின்றன. ஆட்டிறைச்சி, கோழி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், கொட்டைகள், விதைகள் போன்றவைகளை எடுப்பதன் மூம் தேவையான புரதசத்தை பெற முடியும்.



    அதுபோல் விட்டமின் பி-12 அளவும் சரியான அளவு இருந்திட வேண்டும். இந்த பி-12 சத்து குறைவின் மூலம் சோர்வு, எடை குறைவு, வாந்தி போன்றவை ஏற்படும். இந்த விட்டமின் பி-12 இறைச்சியில் அதிகமாக உள்ளது. மருத்துவர்கள் பி-12 ஊட்டச்சத்து மருந்துகளையும் பரிந்துரை செய்கின்றனர்.

    இரும்பு சத்து உணவுகள் :

    சில பெண்கள் பிரசவித்த பின் மிகவும் தளர்வாகவும், சோகையாகவும் காணப்படுவர். இதற்கு இரும்பு சத்து குறைவுதான் காரணம். இதற்கு ஏற்ப விட்டமின் சி சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு, போன்றவைகளில் இவும்பு சத்து அதிகமாக உள்ளது. மஞ்சள் கரு, இறைச்சியிலும் இரும்பு சத்து உள்ளது. கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் சேர்த்து உணவுகளையும் உட்கொள்ளலாம்.

    பச்சைக்காய்கறிகள் பழங்கள் :

    காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் விட்டமின் ஊட்டச்சத்துக்களை கொண்டதாக உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மூலம் பொதுவாக பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கலாம். ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ப்ளு பெர்ரி, அன்னாசி, பட்டாணி, போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மஞ்சள் தரும் அற்புத தீர்வு :

    மஞ்சளில் விட்டமின் பி-6 மற்றும் விட்டமின் சி உள்ளது. மேலும் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளது. இதனை சாதாரணமாக உணவில் சேர்த்து கொள்வோம். இது உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். பிரசவத்திற்கு பின்னர் வயிறு பிரச்சினை மற்றும் காயங்கள் ஆற மஞ்சள் பெரிதும் உதவுகிறது. ஒரு டம்ளர் சூடான பாலில் ½ டிஸ்பூன் நல்ல மஞ்சள் தூளை கலந்து அருந்தலாம். நல்ல பலன் உண்டு.
    ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடுத்தர வயதுள்ள 10 பெண்களில், இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். மனித உடலில் எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதாரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை.

    ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, குழந்தை பிறக்கும் வரைதான் கர்ப்பப்பை முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்சினையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.

    இந்த கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பது தான் முகத்தில் அறையும் உண்மை என்கிறது, சமீபத்திய கள ஆய்வு.

    ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம். கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த அளவிற்கு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள்.

    கர்ப்பப்பையை எடுத்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (கட்டியின் அளவு, தன்மை, புற்றுநோய் எனில் அகற்றுவது அவசியம்). இல்லையென்றால் எடுக்கக் கூடாது. ஏராளமான பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்ற காரணத்திற்காக கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள்.



    இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை? உயிரை உருவாக்கும் புனிதமான கர்ப்பப்பை, அந்த அளவிற்கு இம்சை கொடுக்கிறதா?ஒருபோதும் இல்லை!

    கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவீதத்தினர், நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    மேலும் கர்ப்பப்பை இருக்கும் போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும், துள்ளலும், காணாமல் போய் விடுகின்றன. எப்போதும் சோர்வாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டும் பலருக்கு குணமாவதில்லை. ஒரு சாதாரண புடவை எடுக்க ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

    தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும், பெண்மைக்கும் நல்லது என்கிறது, அந்த ஆய்வு.
    பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.
    பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.

    ஏனெனில் பெண்களின் மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்திகள் மற்றும் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புகள் குறைந்து விடுகிறது.

    ஆனால் தற்போதைய காலத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்ற தொழில்நுட்பம் காரணமாக இன்றைய காலத்தில் உள்ள பெண்களின் குழந்தை பேறுக்கு என்று வயது வரம்பு இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் பெண்கள் தங்களின் மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தையை உருவாகச் செய்கின்ற புதிய சிகிச்சை முறைகள் பிரபலமாகி வருகின்றது.

    பெண்களின் மாதவிடாய்க்கு பிறகு கருத்தரிப்பை ஏற்பட செய்வது எப்படி?



    ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்திகள் இருக்கும். ஆனால் பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு கருமுட்டையின் உற்பத்தி நின்று விடும். எனவே பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் அவர்களின் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும்.

    அந்த கர்ப்பப்பை சுருங்குவதை தடுப்பதற்கு, ஹெச்.ஆர்.டி. எனப்படும் ஹார்மோன் சிகிச்சையை கொடுத்து, மீண்டும் அவர்களுக்கு மாதவிடாயை வர செய்வார்கள். பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்து, பின் அதை பெண்ணின் கருப்பையில் செலுத்தி கருவை வளரச் செய்வார்கள்.

    ஆனால் பெண்களுக்கு செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு முன்பாக அவர்களின் உடல் மற்றும் கர்ப்பப்பை, சிறுநீரகம், இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.மேலும் இந்த சிகிச்சை முறையினால் சிலருக்கு புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஹெச்.ஆர்.டி என்ற சிகிச்சையை செய்து கொள்ளும் பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்வார்கள். ஆனால் இந்த சிகிச்சையை அனுபவம் உள்ள மருத்துவர்களிடன் பெற்றுக் கொள்வதே நல்லது.
    மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்குத் தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் தாக்கத்தை உண்டாக்குகிறது.
    இல்வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். மனிதர்களாகிய நாம் தான் உடலுறவினை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம் போன்றவற்றை அதிகரித்து இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம்.

    பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காரணத்தால் பெண் உடலில் மார்பகம், வயிறு, கீழ் உடல் பகுதிகளில் தசை அதிகரித்து, தொங்குதல் போன்றவை உண்டாகின்றன. சிசேரியன் செய்யும் பெண்கள் மத்தியில் இது அதிகப்படியாகக் காணப்படுகிறது. இதன் காரணத்தால் உடல் வடிவம் மாறுவதால் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகரிக்கிறது.

    பொதுவாகவே உடல் அழகு, வடிவம் இருந்தால் தான் ஆண்கள் தாம்பத்தியத்தில் விரும்பி ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. மிக நடுவயதில் தாம்பத்தியம் என்பது அரிதாக நடக்கும் செயல். மேலும், நடுவயதில் கூடுதல் என்பது மனதின் பால் கொண்ட அன்பினால் தான் அதிகம் உண்டாகும். எனவே, ஆண்கள் மத்தியில் நடுவயதிலும் வடிவம் சார்ந்த தாம்பத்திய ஈடுபாடு மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறது.



    பெண்கள், தன் துணை உடல் ரீதியாகத் தன்னிடம் வடிவத்தை எதிர்பார்க்காமல் செயற்படும் போது, அவர் வேறு பெண்ணுடன் உறவு அல்லது ஈர்ப்பு கொண்டதால் தான் தன்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது இல்லையோ என்ற எண்ணத்திலும் வாழத் துவங்குகிறார்கள். இது போன்ற எண்ணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும், சோர்வு தான் உண்டாகிறதே தவிர, எந்தவிதமான நல்லதும் நடப்பதில்லை.

    ஆண்களை விட, பெண்களுக்குத் தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே வயதாக, வயதாகக் குறையத் துவங்கும். இதற்குக் காரணம் அவர்களது உடல் கூறு. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்குத் தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் தாக்கத்தை உண்டாக்குகிறது.

    உண்மையில் நடுவயதில் பெண்கள் உடல் வடிவ மாற்றங்களால் சண்டைகள் எழுவதை விட, அவர்கள் மன அழுத்தம், அவர்கள் எப்போதும் இதைக் காரணம் கொண்டு சோகமாகக் காணப்படுவது தான் சண்டைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

    ×