search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வரும் பித்தத்திற்கு சித்த மருத்துவம்
    X

    பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வரும் பித்தத்திற்கு சித்த மருத்துவம்

    • பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும்.
    • மெனோபாஸ் நெருங்கும் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு எடுத்துக்கொள்ள நன்மை செய்யும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் பித்தத்தின் சார்பாக அதிகம் கோபம், அடிக்கடி எரிச்சலாதல், அதிக உடல் சூடு, அதிக வெப்பத்தை உணருதல், அதிக வியர்வை, முகப்பரு, சில சமயம் தோல் தடிப்பு ஆகிய குறிகுணங்கள் உண்டாகி வருத்துவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இத்தகைய குறிகுணங்களில் பித்தத்தை குறைக்கும்படியான உணவும், மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உள்ளது.

    பித்தத்தை குறைக்குப்படியான பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும். அதிமதுரம், தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம்,சீரகம், வெந்தயம், வெட்டிவேர், வெண்பூசணி, சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகைகள் அவற்றுள் சில. இவை முக்கியமாக மெனோபாஸ் நிலையில் பெரும்பாலான பெண்கள் அவதியுறும் 'ஹாட் பிளஷஸ்' எனும் 'திடீர் வெப்ப உணர்வு' குறிகுணத்தினை குறைக்க உதவுவதாக உள்ளன.

    அதிமதுரம், சீரகம், சோம்பு இவை மூன்றையும் கலந்து பாலுடன் சேர்த்து பால் கசாயமிட்டு குடிக்க பித்தம் சார்ந்த அனைத்து குறிகுணங்களுக்கும் நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக அதிமதுரத்தில் உள்ள டெர்பீன்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருட்கள் ஹாட் பிளஷஸ் குறிகுணத்தை குறைப்பதாக உள்ளது. ஆனால் அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிமதுரம் ஏற்புடையது அல்ல. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பித்தத்தைக் குறைக்கும் 'சீரக சூரணம்' எனும் மருந்து மேற்கூறிய குறிகுணங்களை குறைக்க உதவும்.

    தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் சித்த மருத்துவ மூலிகை மெனோபாஸ் நிலையில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மெனோபாஸ் நெருங்கும் தருவாயில் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயமிட்டு எடுத்துக்கொள்ள பித்தவாதம் குறைந்து பெரும்பாலான குறிகுணங்கள் குறைந்து பெண்களுக்கு நன்மை செய்யும். அல்லது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'தண்ணீர்விட்டான் நெய்' அல்லது 'சதாவேரி லேகியம்' ஆகிய மருந்துகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

    இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், பிற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் இதனால் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் உண்டாகும் கருவாய் வறட்சி, எரிச்சல் ஆகிய குறிகுணங்களும் நீங்கும். பெண்கள் மேற்கூறிய பித்தம் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படும்போது சீரக தண்ணீர் எடுத்துக்கொள்வதும், வெட்டிவேர் மற்றும் சந்தனம் ஊறல் நீர் குடிப்பதும் கூட குறிகுணங்களை சமாளிப்பதில் ஏதுவானதாக இருக்கும்.

    வெந்தயம் எனும் எளிய கடைசரக்கு அதிகப்படியான டெஸ்டோஸ்டீரோன் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் மெனோபாஸ் நிலையில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக அவ்வப்போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமை, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெந்தயம் ஏற்புடையது அல்ல.

    பித்தத்தை குறைத்து நன்மை பயக்கும் சோற்றுக்கற்றாழையை அவ்வப்போது சாறாகவோ அல்லது குமரி எண்ணெய், குமரி லேகியம் போன்ற சித்த மருந்துகளாக எடுத்துக்கொள்ள பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். நாம் உணவில் பயன்படுத்தும் வெண்பூசணி பித்தத்தை குறைப்பதில் பயனளிக்கும். ஆக, சித்த மருந்தான வெண்பூசணி நெய் கூட பயன்படும். மூலிகைகளை கடந்து சங்கு பற்பம், பவள பற்பம், வெள்வங்க பற்பம் போன்ற இன்னும் பல பற்ப, செந்தூர சித்த மருந்துகள் பயன்படும் வகையில் உள்ளது.

    மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு இயற்கையாகவே குறைவதால் உண்டாகும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களில் முக்கியமான ஒன்று உடல் எடை கூடுதல். இதனால் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, எச்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பின் அளவு குறையக்கூடும். ஆகையால் பெண்கள் கருஞ்சீரகம், சீரகம் ஆகிய இரண்டையும் வறுத்துப்பொடித்து எடுத்துக்கொள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×