search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சன்ஸ்கிரீன்
    X
    சன்ஸ்கிரீன்

    சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

    சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சூரிய ஒளி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் சூரிய ஒளி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். மன ஆரோக்கியத்திற்கும் வித்திடும். இருப்பினும், அதிகப்படியான சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். தோல் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடும். சரும புற்றுநோயையும் எதிர்கொள்ள வைத்துவிடும்.

    கோடை காலத்தில்தான் சூரிய கதிர்வீச்சுகள் உமிழும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. சன்ஸ்கிரீன் கிரீம்கள் பயன்படுத்துவதுதான் சிறந்த வழிமுறையாக அமையும். சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சரும சுருக்கம், மந்தமான தன்மையை போக்குவதோடு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீன் சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

    மடிக்கணினிகள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அவை நீல நிறத்தை வெளியிடுகின்றன. சன்ஸ்கிரீன் இவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. எனவே, நல்ல தரமான சன்ஸ்கிரீன் உபயோகிப்பது முக்கியம்.

    சன்ஸ்கிரீனில் எஸ்.பி.எப் அளவு குறைந்தபட்சம் 15 முதல் 20 வரை மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் தோல் புற்றுநோயை உண்டாக்கும் யூ.வி.பி. கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் அளவீடு ஆகும்.

    சன்ஸ்கிரீன் சருமத்துடன் ஒட்டாமல் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த சன்ஸ்கிரீனாக கருதப்படும். மேலும் பயன் படுத்தும்போது வெள்ளை நிறம் சட்டென்று நீங்கிவிடக்கூடாது. முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசுவதற்கு அரை டீஸ்பூன் சன்ஸ்கிரீன் போதுமானது. மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை மீண்டும் சருமத்தில் தடவுவது நல்லது. அதிலும் வெயில் அதிகம் இருக்கும் சமயத்தில் அடிக்கடி உபயோகித்து வர வேண்டும். வெளியே செல்வதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அது சருமத்தில் சரியாக உறிஞ்சப்படாது. வெயில் சருமத்தில் அதிகம் படர்வதற்கான வாய்ப்பும் உருவாகிவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது.

    கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீனுக்கு மாற்று ஏதுமில்லை. இருப்பினும், சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க வேறு சில வழிகள் உள்ளன.

    உதடுகளும் சூரிய ஒளியால் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, சன்ஸ்கிரீன் பண்புகளை கொண்ட லிப் பாம் தடவலாம். கூடுமானவரை உடல் பகுதிகளை மூடும்படியான ஆடைகளை அணிவது நல்லது. வெயிலில் இருந்து உச்சந்தலையைப் பாதுகாக்க அகலமான விளிம்பு கொண்ட தொப்பியை அணியலாம். குடையை உடன் எடுத்துச் செல்லலாம்.

    முடிந்தவரை நிழலான பகுதியில் நடமாடலாம். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்துவிடலாம்.
    Next Story
    ×