search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முகத்தில் படியும் அழுக்குகளை அகற்றும் வழிகள்
    X
    முகத்தில் படியும் அழுக்குகளை அகற்றும் வழிகள்

    முகத்தில் படியும் அழுக்குகளை அகற்றும் வழிகள்

    முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.
    முகம் பொலிவிழந்து சோர்வுடன் காட்சியளிப்பதற்கு சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும். முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். இந்த வழக்கத்தை அடிக்கடி பின்பற்றி வந்தாலே சருமம்  சுத்தமாகிவிடும். பிரகாசமாகவும் ஜொலிக்கும். அழுக்குகள் படியாது. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.

    பாதாம்: இதில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிரம்பியுள்ளது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி
      மசாஜ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். முகம் புத்துணர்ச்சியோடும் காட்சி தரும்.

    பச்சை பயறு: இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் தன்மையும் பச்சை பயறுக்கு உண்டு. பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் அழுக்குகள் எட்டிப்பார்க்காது. முகம் புதுப்பொலிவோடு காட்சிதரும்.

    உளுந்தம் பருப்பு: 50 கிராம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குடன், இறந்த செல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். முகம் ஜொலிப்புடன் மின்னும்.

    அரிசி மாவு: இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. சோர்வோடு காணப்படும் சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும் தன்மை இதற்கு உண்டு. சிறிதளவு அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சிடும்.

    ஜவ்வரிசி: அகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசியுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அகலும். முகமும் பிரகாசமாக காட்சி தரும்.

    கல் உப்பு: இதில் கனிமச்சத்துக்கள் ஏராளம் இருக்கிறது. சிறிதளவு கல் உப்புடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள், இறந்த செல்கள் அடியோடு அகலும். சருமத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
    Next Story
    ×