search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாசனை திரவியம்
    X
    வாசனை திரவியம்

    வாசனை திரவியம் மணம் வீச...

    உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறைய பேர் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவார்கள்
    உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறைய பேர் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவார்கள். உடுத்தும் ஆடையில் இருந்து நறுமணம் வெளிப்படுவதற்காக வாசனை திரவியங்களை உபயோகிப்பவர்களும் உண்டு. வாசனை திரவியங்களை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும்? உடலில் எந்தெந்த பகுதிகளில் அதனை தெளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

    விதவிதமான வாசனை திரவியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் சிட்ரஸ் பழங்கள், பூக்கள், மூலிகைகள் போன்றவற்றில் தயாராகுபவை தான் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. அதுபோன்ற இயற்கை வாசனைகளை கலந்த பெர்மியூம்களை பயன்படுத்துவது நல்லது. அவை நீண்ட நேரம் வாசனையை தக்கவைத்திருக்கும். உடல் பாகங்களுக்கும் தீங்கு நேராது.

    பகல் வேளையில் பயன்படுத்துவது, இரவு நேரங்களில் பயன்படுத்துவது என இரு வகையான வாசனை திரவியங்கள் இருக்கின்றன. வெளி இடங்களுக்கோ, வேலைக்கோ, கடற்கரைக்கோ செல்லும்போது பகல்நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். அவை பகல் பொழுதுக்கு ஏற்ப கடின தன்மையுடன் இருக்கும். இரவு நேரத்தில் விருந்துகள், பார்ட்டிகளுக்கு செல்லும்போது இரவு நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். எந்த நேரத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியம் என்ற விவரம் அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு உபயோகிக்கலாம்.

    இரவில் வெளி இடங்களுக்கோ, விருந்துகளுக்கோ செல்வதாக இருந்தால் கழுத்தை சுற்றிய துணிப் பகுதிகளில் வாசனை திரவியங் களை தெளிக்க வேண்டும். ஏனெனில் இரவில் பயன்படுத்தப் படும் வாசனை திரவியங்கள் மென்மையாகவும், விரைவாக வாசனையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அது நீண்ட நேரம் வாசனையை வெளிப் படுத்திக்கொண்டே இருக்கும்.

    பகல் வேளையில் இடுப்பு அல்லது முழங்கால்களுக்கு கீழே வாசனை திரவியங்களை தெளிக்கலாம். அத்துடன் அக்குள், மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதி துணிகளிலும் தெளிக்கலாம்.

    ஷாம்புகள், கண்டிஷனர்கள் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களில் சில வகை வாசனை திரவியங்கள் கலக்கப்படுகின்றன. சீப்புகள், பிரஷ்கள், டவல்கள் போன்றவற்றில் வாசனை திரவியங்களை கலந்தும் கூந்தலுக்கு உபயோகப்படுத்தலாம்.

    காதின் பின்பகுதியிலும், விரல்களின் பின்பகுதியிலும் சில வாசனை திரவியங்களை தடவலாம். காது நரம்புகளுக்கும், சருமத்திற்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இரவு நேரங்களில் காது பகுதியில் வாசனை திரவியங்களை தெளிப்பது சட்டென்று நறுமணத்தை பரவ செய்யும். சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
    Next Story
    ×