என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு நல்ல பொருத்தமானது. இப்போது மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சை - 1/2 கப்
    கத்திரிக்காய் பிஞ்சாக - 6
    பூண்டு - 7 பல்
    சின்ன வெங்காயம் -  50 கிராம்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    தக்காளி - 1
    உப்பு - தேவைக்கு
    மஞ்சள் தூள் - 1/4
    புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி
    சாம்பார் மிளகாய்ப்பொடி (அல்லது) தனி மிளகாய்த்தூள் - 2 1/2 ஸ்பூன்
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய்  - 1 1/2 மேஜைக்கரண்டி
    சோம்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1/4 ஸ்பூன்

    செய்முறை :

    * மொச்சையை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

    * கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    * கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    * குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    இடித்த பூண்டு - நான்கு பல்
    பெருங்காயம் - சிறிதளவு
    கோவக்காய் -300 கிராம்

    பவுடர் செய்ய :

    கடலை பருப்பு - மூன்று டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - மூன்று டீஸ்பூன்
    சீரகம் - இரண்டு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - நான்கு

    செய்முறை :

    * கோவக்காயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, இடித்த பூண்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கோவக்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

    * கோவக்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு அரைத்த பொடி சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா ரெடி.

    * இந்த செட்டிநாடு கோவக்காய் மசாலா தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    உளுத்தம் பருப்பு - 1 கப்
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    மசாலாவிற்கு...

    உருளைக்கிழங்கு - 2  
    வெங்காயம் - 2  
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 3 பற்கள்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகாய் சட்னிக்கு...

    சிவப்பு மிளகாய் - 5
    வறுத்த கடலைப் பருப்பு - 1/2 கப்
    தேங்காய் - 1/2 கப் (துருவியது)
    பூண்டு - 2 பற்கள்
    புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்க விடவும்.

    * மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, ப.மிளகாயை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் மாவை ஊற்றி மெல்லிய தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி (தோசை முழுவதும் படும்படி), நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, சுற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும்.

    * இப்போது சூப்பரான மைசூர் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை வைத்து போளி செய்து கொடுத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :
     
    உருளைக்கிழங்கு - 4
    கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    முந்திரி பருப்பு - எட்டு
    மைதா மாவு - இரண்டு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
    நெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
     
    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
     
    * பிறகு, ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி நடுவில் உருளைக்கிழங்கு பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காய் பொரியல், வறுவல் சாப்பிட்டு இருப்பீங்கள். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :
     
    * வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
     
    * ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


     
    * இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.
     
    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதுமு, பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.

    * சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5
    மிளகு - 3 டீஸ்பூன்

    செய்முறை :

    * வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

    * வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

    * வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் மிகவும் நல்லது. இங்கு பாகற்காய் சாம்பாரை எப்படி கசப்பின்றி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்
    துவரம்பருப்பு - 2 கப்
    புளி - எலுமிச்சை அளவு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    தேங்காய் துருவல் - 5 மேசைக்கரண்டி
    தனியா - 4 தேக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 8
    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - கால் தேக்கரண்டி
    பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 2
    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை :

    * புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

    * பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும்.

    * தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.

    * கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..

    * சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.

    * தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் கீமாவை வைத்து அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இப்போது ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கீமா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 250 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 சிட்டிகை
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் கீமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * கழுவி மட்டம் கீமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்த பின் மீதமுள்ள மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி சிறிது வதங்கியதும் அதில் ஊற வைத்த கீமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கீமா குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே விருப்பமான பழங்களை வைத்து ஜாம் செய்து சாப்பிடலாம். இப்போது எளிய முறையில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 5
    பப்பாளி - 1
    திராட்சை - 1 கிலோ (விதை இல்லாத திராட்சை)
    வாழைப்பழம் - 3
    ஸ்ட்ராபெர்ரி - 8
    அன்னாசி - 1 (சிறியது)
    எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
    சிட்ரிக் ஆசிட் - 6-7 டீஸ்பூன்
    சர்க்கரை - 1 கிலோ
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * அன்னாசி மற்றும் பப்பாளியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஆப்பிளை தோல் சீவாமல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய அன்னாசி, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களைப் போட்டு, 10 நிமிடம் வேக வைத்து, இறக்க வேண்டும். அதன் பின்பு ஆப்பிளின் தோலை நீக்கிவிடவும்.

    * மிக்ஸி/பிளெண்டரில் திராட்சை, எலுமிச்சை சாறு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி சேர்த்து நன்கு கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அடிகனமான வாய் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கூழ், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    * அடுத்து அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து, கெட்டியானதும் இறக்க வேண்டும்.

    * அப்போது கலவையானது நீர்மமாக இல்லாமல் கெட்டியாக இருந்தால், ஜாம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.

    * பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.

    * இப்போது சுவையான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ரெடி!!!

    * விதை இல்லாத திராட்டை கிடைக்காவிட்டால் திராட்சையில் உள்ள விதைகளை எடுத்து விட்டும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 12
    புளி - எலுமிச்சை அளவிற்கும் மேல்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    கொத்தமல்லி - அலங்கரிக்கச் சிறிதளவு

    வறுத்து அரைக்க :
     
    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
    துவரம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 3(பெரியது)
    பெருங்காயம் - சிறிதளவு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1/2
    பூண்டு - 3 பல்லு

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
     
    செய்முறை :

    * வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு கரைத்து கொள்ளவும்.

    * வாணலியில் சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் ஆகிய பொருட்களைச் போட்டு சிவக்க வதக்கி தனியாக வைக்கவும்.

    * அடுத்து வெங்காயம் பூண்டு, தக்காளியை போட்டு தனித்தனியாக சிவக்க வதக்கி ஆற வைத்து, வறுத்த அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பை போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதித்தவுடன் கறிவேப்பிலையைக் கசக்கி குழம்பில் போடவும்.

    * தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சி குழம்புடன் சேர்க்கவும்.

    * கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய எளிமையான செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)

    வறுத்து அரைப்பதற்கு...

    சோம்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஓமம் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2 துண்டு
    மிளகு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 4
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 2-4

    குழம்பிற்கு...

    சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
    தக்காளி - 2 (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 1/4 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

    * அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    *  அதனுடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * பின் அதில் இறாலை சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!

    கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    கத்திரிக்காய் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    முந்திரி பருப்பு - 15
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    பெருங்காயப்பொடி - 2 பின்ச்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
    புளித்தண்ணீர் - கால் கப்
    உப்பு - தேவைக்கு.

    வாங்கி பாத் பொடி :

    முழு மல்லி - 3 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 2 ,
    பட்டை -  சிறு துண்டு,
    கிராம்பு - 1
    கொப்பரை தேங்காய் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :


    * அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.

    * கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

    * இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    * எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்த்து இறக்கவும்.

    * சுவையான வாங்கி பாத் ரெடி.

    * வாங்கி பாத் பொடி கடைகளில் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×