என் மலர்
சமையல்

வீட்டிலேயே செய்யலாம் சாம்பார் இட்லி
- சாம்பார் இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீர்கள்.
- வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 2 கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
பரங்கிக்காய் - சிறிய துண்டு.
சின்ன வெங்காயம் - 12,
தக்காளி - 3,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
புளி - சிறிய உருண்டை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கொப்பரை - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, துவரம் பருப்பை குழைய வேக வையுங்கள்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள்.
அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.