search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மொறு மொறு மீன் கோலா உருண்டை
    X

    மொறு மொறு மீன் கோலா உருண்டை

    • கோலா உருண்டைகளில் பல வகைகள் உண்டு.
    • இன்று நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.

    தேவையான பொருட்கள்

    வஞ்சிரம் மீன் - 250 கிராம்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பெரிய வெங்காயம் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகாய் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

    வெந்த மீனை ஆறவிட்டு எள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்பொழுது ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.

    Next Story
    ×