search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை
    X

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை

    • இது பொதுவான நோய்களில் ஒன்றாகும்.
    • தினமும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை இருப்பதாக வேலூர் சித்த மருத்துவ டாக்டர் திவ்யா கூறினார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் சித்த மருத்துவர் டாக்டர் எம். திவ்யா சைனசைடிஸ் நோய்க்கான அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து கூறியதாவது:-

    சைனசைடிஸ்

    இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சைனசைடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவான நோய்களில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் இதனை பீனிசம், நீர் கோவை, மூக்கடைப்பு நோய் போன்ற பெயர்களால் குறிப்பிடுவர். நமது முகம் மற்றும் தலைப்பகுதிகளில், மூக்கின் இரு பக்கம், நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளில் குழிகள் போன்ற காற்றறைகள் உள்ளன. இவையே 'சைனஸ்' எனப்படும். இவற்றில் குளிர்ந்த காற்று, தூசி போன்றவற்றால் நீர்த்தேக்கம் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதில் நோய் தொற்று, அழற்சி, வீக்கம், தும்மல் போன்ற குறி குணங்கள் ஏற்பட்டு சைனசைடிஸ் என்ற நோய் நிலையை அடையும்.

    காரணிகள்

    பண்பான பித்தத்தில் சேத்துமம் கூடி பரிசித்தால் பீனிசமும்' என்ற சதகநாடியின் படி உடலில் பித்தம் முற்றும் மிகுந்துள்ளபோது கபத்தை பெருக்கக் கூடிய செயல்களால் பிறந்த கபபித்த நோயை பீனிசம் ஆகும். உடற்சூடு அதிகரித்துள்ள போது குளிர் காற்றில் ஈடுபடுதல், குளிர்ந்த பானம் அருந்துதல், வெயிலில் அலைந்து வந்த மறுகணம் குளிரூட்டப்பட்ட அறையில் இருத்தல். புகை, தீங்கு விளைவிக்கும் வாயு, தூசி போன்றவற்றை நுகர்தல், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளல்.

    குறிகுணங்கள்

    தும்மல், மூக்குநீர்பாய்தல், மூக்கடைப்பு, தலைவலி மூக்கில் இருந்து சளி, சீழ் போன்றவை வெளியாதல், கண் சிவந்து நீர் வடிதல், தலைபாரம், மூக்கின் துளை சிவந்து காணல், முகம் மற்றும் காது முதலானவை நோதல்.

    வெளி மருத்துவ முறைகள்

    தும்பை, நொச்சி, வேப்பிலை, எலுமிச்சை முதலியவற்றின் இலைகள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு நீராவி பிடித்தல்.

    மூக்கடைப்பிற்கு ஓம பொட்டணமிடல். மூலிகை எண்ணெய் குளியல். தைலங்களை கொண்டு நசியமிடல் வர்ம சிகிச்சை முறை மேற்கொள்ளல்.

    மூக்கடைப்பு மற்றும் அழற்சிக்கு மூலிகையாலான வர்த்தி கொண்டு புகையிடல்.

    அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    சைனசைடிஸ் நோயிலிருந்து தற்கால தற்காத்துக் கொள்ள அதிக உடல் சூட்டை குறைக்கும் படியான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிப்பதற்கான காரணங்களானவை; நேரம் தவறி உண்ணுதல், இரவு வெகு நேரம் கண்விழித்தல். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கரிசாலை, மணத்தக்காளி கீரை, கத்தரிபிஞ்சு முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, வரப்பு நண்டு முதலியவற்றை உணவில் சேர்த்தல் வேண்டும். தினமும் மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்) மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும். வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைமுழுகுதல் வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளான தூதுவளை, மிளகு, புதினா, துளசி, சுக்கு, மஞ்சள் முதலியவற்றை தினசரி சேர்த்தல் வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

    வீட்டு வைத்திய முறை

    மிளகு பாவனம், தூதுவளை ரசம், நண்டு ரசம் முதலியவற்றை அருந்த வேண்டும். இலவங்கப்பட்டை தூள் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்துதல் வேண்டும். மஞ்சள் தூளில் துளசி இலைச்சாறு, தும்பை பூச்சாறு, கற்பூரவல்லி இலைச்சாறு முதலிய சாறுகளை இட்டு நெற்றி மற்றும் மூக்கின் இரு பக்கங்களில் பற்றிடல் வேண்டும்.

    சைனசைடிஸ் நோய்க்கான தக்க சித்த மருத்துவ உள் மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொண்டு நலம் பெற்று வாழ்வோம்.

    Next Story
    ×