என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் ரம்புட்டான் பழம்
    X

    மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் ரம்புட்டான் பழம்

    • இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
    • வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    ரம்புட்டான், ஒரு சுவையான மற்றும் சத்தான பழம். இது மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் வெளித்தோற்றம் முள் போன்று கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து ருசியாகவே இருக்கும். இந்த பழத்தின் தாயகம் மலேசியா மற்றும் இந்தோனேஷியா. தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட பகுதிகளில் விளைகிறது. ரம்புட்டான் பழம், காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் மாறும்.

    ரம்புட்டான் பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் பருமனால் அவதிப்படுவோர், ரம்புட்டானை அடிக்கடி சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதையும் தடுக்கும். இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள், உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும். உடல் சீரான வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றும். ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கவும் செய்யும். இதனால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.



    ரம்புட்டான் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால், தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதில் பாஸ்பரஸ் இருப்பதால் சிறுநீரகத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். மேலும் திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ரம்புட்டானில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதிகமாக சாப்பிட தோன்றும் எண்ணத்தையும் குறைத்துவிடும். இந்த பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து குடலில் ஜெல் போன்ற ஒரு பொருளை உருவாக்குகிறது. இந்த ஜெல் போன்ற பொருள் செரிமானத்தையும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் மெதுவாக்க உதவுகிறது, இதனால் பசி உணர்வு குறைகிறது.

    இந்த பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சாப்பிட வேண்டும். வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கவனத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    Next Story
    ×