search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    வீடுகளில் வளர்க்கலாம் பொன்னாங்கண்ணி
    X

    வீடுகளில் வளர்க்கலாம் பொன்னாங்கண்ணி

    • உடல் தங்கம் போன்று உறுதி அடையும்.
    • ஒரு மண்டலம் உட்கொள்ள உடல் அழகு பெறும்.

    பொன்னாங்கண்ணி கீரையில் தங்க சத்து உண்டு என்றும், இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதி அடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை 'பொன் ஆம் காண் நீ' இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய் என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது என கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணி கீ்ரையை செம்மையாய் நெய்யில் வதக்கி மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள உடல் அழகு பெறும். பொன்னிறம் அடையும். கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.

    பொன்னாங்கண்ணி மற்றும் கரிசாலங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண் புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச் செடிகள் அல்லது நுண்தண்டுகளை நட வேண்டும். பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் உரத்தை பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு 2 முறை (6 மாத இடைவெளியில் இட வேண்டும்.)

    மண்ணை நன்றாக வெட்டி ஒரு சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம். வோ்களை உடைய பக்க செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.

    பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது. தொட்டியில் பராமரிக்கும்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (தொட்டிக்கு 1 கிலோ) இட வேண்டும்.

    தொட்டியிலும், பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மி.லி. அளவு) தெளிப்பது நல்லது.

    செடிகளை நட்ட 4-வது மாதத்தில் இலைகளை தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம். தரை மட்டத்தில் இருந்து 5 செ.மீ. உயரத்தில் முழு செடியை வெட்டி எடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு 91717 17832 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணை பேராசிரியர் சி.ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×