search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    முதுகெலும்புக்கு இது முக்கியம்
    X

    முதுகெலும்புக்கு இது முக்கியம்

    • முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது.
    • சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    விளையாடும்போதோ, விபத்தின்போதோ முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளையும் முடக்கிவிட வாய்ப்புள்ளது. 'ஸ்பைனல் கார்டு இஞ்சுரி' எனப்படும் இந்த முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது. சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடியது.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பேர் முதுகெலும்பு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பு காயம் உள்ளவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுகெலும்பு காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்துக்களில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 90 சதவீதம் பேர் முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவது, வன்முறையில் பாதிப்புக்குள்ளாவது போன்றவை இதில் அடங்கும். முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாள்பட்ட வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலர் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது: கார் விபத்துக்கள்தான் பெரும்பாலும் முதுகு தண்டுவட காயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. அதனால் சீரான வேகத்தில் கார் ஓட்டுவது அவசியம். கார் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்களுடன் பேசுவது, எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போன்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கார் ஓட்டுபவரும், உடன் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

    தடுமாறி விழுதல்: எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுவதும் முதுகெலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சைக்கிளிலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டால் முதுகெலும்பில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் கவனமாக செயல்பட வேண்டும்.

    விளையாட்டு: விளையாடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து சாகசம் செய்யும் விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது முதுகெலும்பு பகுதியை கடுமையாக பாதித்துவிடும்.

    மதுப்பழக்கம்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு மூல காரணமாகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×