என் மலர்

  பொது மருத்துவம்

  மன அழுத்தம் உடல் உறுப்புகளையும் பாதிக்கும்
  X

  மன அழுத்தம் உடல் உறுப்புகளையும் பாதிக்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன அழுத்தம் ஏற்படும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
  • மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்பு எத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறது என்று பார்ப்போம்.

  இன்றைய காலகட்டத்தில் ஜலதோஷத்தை போலவே மன அழுத்தமும் பொதுவான வியாதியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது மன நலம் சார்ந்த பிரச்சினையாக தெரிந்தாலும் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்பு எத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறது என்று பார்ப்போம்.

  நோய் எதிர்ப்பு மண்டலம்:

  மன அழுத்தத்தின்போது `கார்டிசோல்' எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும். அதன் காரணமாக வைரஸ் மற்றும் பிற வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். மன அழுத்தத்தில் இருக்கும்போது நோய்வாய்ப்படுவதற்கான காரணம் இதுதான்.

  வயிறு: மன அழுத்தம் நீடித்துக்கொண்டிருந்தால் வயிற்றில் உள்ள இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். வயிற்றில் புண்களும் உண்டாகக்கூடும்.

  இதயம்: மன அழுத்தம் ஏற்படும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவை இரண்டின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது இதய ஆரோக்கியத்திற்கு கேடாக முடியும்.

  கொழுப்பு, சர்க்கரை: மன அழுத்தமானது புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கீட்டோன்களை சர்க்கரையாக மாற்றிவிடும். இந்த அதிகப்படியான சர்க்கரை ரத்த ஓட்டத்தில் கலந்து நீரிழிவு நோய்க்கு ஆளாக்கிவிடும். மேலும் இந்த சர்க்கரை வயிற்றை சுற்றி கொழுப்பு படிவதற்கும் வித்திடும். இதனால் தொப்பை பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

  தசை: மன அழுத்தத்தின் போது, ​தசைகள் கடினமாகி, தசைப் பிடிப்பு ஏற்படக்கூடும். இதனால் உடல் இயக்கம் பாதிப்புக்குள்ளாகும்.

  நுரையீரல்: மன அழுத்தம் நீடிக்கும்போது சுவாசத்தில் பாதிப்பு நேரக்கூடும். இயல்பை விட அதிகமாக மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்க நேரிடும். மூச்சுத்திணறலை உணரலாம். போதுமான ஆக்சிஜன் கிடைக்காத நிலையும் ஏற்படும். குறிப்பாக ஹைப்பர் வென்டிலேஷன் பிரச்சினையை அனுபவிக்கக்கூடும். இது கவலை, பீதி, பதற்றம் போன்றவற்றால் ஏற்படும். சுவாசத்தின் அளவு அதிகரிப்பதாக உணர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

  மூளை: மன அழுத்தம் மூளையின் செயல்பாடுகளையும் பாதிக்கும். தூக்க சுழற்சியையும் சீர்குலைத்துவிடும். சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடும் தடுமாற்றமடையும்.

  மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிப்பதற்கு காரணம் இருக்கத்தான் செய்கிறது. மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு, மாதவிடாய் கோளாறு போன்றவை மன நோய்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய பிரச்சினைகள் ஆண்களுக்கு இல்லை. பாலின வேறுபாடும் உலகெங்கிலும் நிலவுகிறது. ஆண்களை விட பெண்கள் குறைந்த அதிகாரத்தையும், அந்தஸ்தையுமே பகிர்ந்து கொள்கிறார்கள்.

  பெண்கள் பெரும்பாலும் வேலை, குடும்பம் என்ற இரட்டை பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பணிச்சுமை மனநலம் சார்ந்த கவலைக்கு உள்ளாக்கும்.

  பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகிறார்கள். இது மனச்சோர்வு மற்றும் பிற மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

  ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் மன நலம் பேணுவது அவசியமானது. உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மகிழ்ச்சியான மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு இது முக்கியமானது.

  மன நலனை பேணுவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

  உணவு: ஆரோக்கியமான மனதுக்கும், உடலுக்கும் சமச்சீர் உணவு முக்கியமானது. எனவே, உணவில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சேர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு நிறைய தண்ணீர் பருக மறக்காதீர்கள்.

  உடல் செயல்பாடு: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி முக்கிய மானது. உடற்பயிற்சி செய்யும்போது, `எண்டோர்பின்கள்' எனப்படும் நல்ல ஹார்மோன்களை உடல் வெளியிடுகிறது. இது மன நிலையை மேம்படுத்தக்கூடியது. வாரம் குறைந்த பட்சம் 150 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முக்கியமானது. வேலைக்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்களோ அதேபோல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். விடுமுறை நாளின் பெரும் பகுதியை பொழுதுபோக்குக்காக ஒதுக்க வேண்டும். அது மன நலனை பேணுவதற்கு உதவி புரியும்.

  Next Story
  ×