search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    செம்பு பாட்டிலில் அடிக்கடி தண்ணீர் பருகினால் ஆபத்து
    X

    செம்பு பாட்டிலில் அடிக்கடி தண்ணீர் பருகினால் ஆபத்து

    • செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது.
    • செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    கொரோனா ஏற்படுத்தி சென்ற படிப்பினை காரணமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் பழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஏற்படுத்தும் கேடுகளை உணர்ந்து அலுமினியம், களிமண், மூங்கில், செம்பு போன்றவற்றில் தயாராகும் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது. வெளி இடங்களுக்கு செல்லும்போது செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பருகுகிறார்கள். ஆனால் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை அடிக்கடி பருகுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    செம்பு பொருட்களை உபயோகப்படுத்துவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதிலும் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தி, எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் செம்பு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயலாற்றக்கூடியது.

    டி.என்.ஏ மற்றும் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தக்கூடியது. உடல் போதுமான அளவுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் செம்பு உதவுகிறது. இத்தகைய காரணத்திற்காக செம்பு பாட்டிலில் தண்ணீர் பருகுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

    ஆனால் செம்பு பாட்டில் தண்ணீரை அதிகம் பருகுவது ஆபத்தானது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆப் டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, செம்பு பாட்டில் தண்ணீரை பருகுவது உடலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எப்போதாவது பருகினால் மட்டுமே அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். அடிக்கடி செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்புவது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். சரியாக பராமரிக்காவிட்டால் துருப்பிடிக்க வழிவகுக்கும். இது சிக்கலை அதிகப்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

    செம்பு இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. தினமுமோ, அடிக்கடியோ செம்பு பாட்டில் தண்ணீரை பருகும்போது ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்முறை இயல்பை விட அதிகமாக நடைபெறும். அதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படையக்கூடும். செம்பு துகள்கள், படிகங்களை சுவாசிக்கும்போது தொண்டை, மூக்கு பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.

    செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனை முழுமையாக பின்பற்றுவதன் மூலமே பக்கவிளைவுகள் இல்லாமல் செம்புவின் நன்மைகளை பெற முடியும். இரவில் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து மறுநாள் பருகுவதுதான் சரியான வழிமுறை. இந்த தண்ணீரையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் பருகக்கூடாது.

    காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலனை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு கப் தண்ணீரில் 0.47 மில்லி கிராம் மட்டுமே செம்பு கலந்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி கிராம் செம்பு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 மில்லி கிராமுக்கு மேல் செம்பு உடலில் சேர்ந்தால் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால் செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை அளவோடு பருகுவதுதான் நல்லது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×