search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மீன் தலை
    X
    மீன் தலை

    மீனின் தலையில் அதிக சத்து

    சிவப்பு நிறத்திலான இறைச்சிக்கு பதிலாக மீனை உட்கொண்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
    மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் பலரும் அதன் தலையை ருசிப்பதில்லை. கடைகளில் மீன் வாங்கும்போதே தலையை தவிர்த்து விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மீனின் உடல் பகுதியை விட தலைப்பகுதிதான் அதிக சத்து கொண்டதாக இருக்கிறது. தலைப்பகுதியில் பலவகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

    ஆரோக்கியமான புரதம் அதிக அளவில் மீனின் தலைப்பகுதியில் இருக்கிறது. மற்ற இறைச்சி வகைகளை விட மீனின் தலையில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆதலால் மீன் தலையை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு அதிகரிக்காது. சிவப்பு நிறத்திலான இறைச்சிக்கு பதிலாக மீனை உட்கொண்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

    மீனின் மற்ற பகுதிகளை விட தலைப்பகுதியில்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து காக்கும்தன்மை கொண்டது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு அளவு குறைவதாகவும், இதயதுடிப்பு சீரடைவதாகவும் பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மன நோய்களில் இருந்தும் அது பாதுகாக்கிறது.

    மீனின் தலைப்பகுதியில் வைட்டமின்-ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. அது கண்கள் மற்றும் மூளைக்கு நல்லது. வைட்டமின்-ஏ, கண் பார்வை திறனை அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்தவும் செய்யும்.

    மீனின் தலையில் உள்ளடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூட்டுவலி, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும்.
    Next Story
    ×