search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜிகா வைரஸ்
    X
    ஜிகா வைரஸ்

    அறிகுறி ஏற்படுத்தாத ஜிகா வைரஸ்

    கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.
    வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

    கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

    டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் இந்த வைரசும் பரவுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை-மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்படும்.

    ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது. தொற்று பரப்பும் கொசு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும். தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலும் குணமடைய வாய்ப்பு உண்டு.

    அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.

    இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
    Next Story
    ×