
எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.
நீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும். வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.
வலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
ரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.
மலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்.