
கொரோனா தொற்றுநோய் என்பது விலங்குகளிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு நோய். இந்த நோய் தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. இந்த வைரஸ் கிருமி வட்ட வடிவில் உள்ளது. இதன் மேல் கிரீடம் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது. இதனால் தான் இதற்கு ‘கொரோனா‘ என்று பெயர் வைக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்டவுடன் சளி மற்றும் இருமல் தான் இருக்கும். இந்த நோயின் தாக்கம் வெளிப்படுவதற்கு 2 வாரங்கள் ஆகும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்னும் முதுமொழிக்கேற்ப, நோய் நொடியின்றி இருக்க சுத்தமும் சுகாதாரமும் அவசியம். தற்போது கொரோனா என்னும் உயிரைக் குடிக்கும் வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க, கைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கைக்குட்டை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், இருப்பிடத்தை தூய்மையாக வைத்தல், காய்கறிகளை கழுவிய பின் சமைத்தல் ஆகிய செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏனெனில், “காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா” என்று சித்தர்கள் உடலைப் பற்றி கூறியுள்ளனர். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை, “காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நூறாண்டுகள் உய்யடா” என உடம்பின் மேன்மையை அக்கறையோடு விளக்கியுள்ளது நினைவு கூரத்தக்கது.
“சுத்தம் சோறு போடும்” என்ற மூத்தோர் வாக்கினை போல, நாமும் சுகாதார முறையில் இருந்து பிறழாமல் கடைப் பிடித்தால் எந்த வகை நோயினையும் எளிதில் வெல்லலாம்.