
சரி மனதை எப்படி மகிழ்வாக வைத்துக்கொள்வது? மகிழ்வான மனது என்பது என்ன? உண்மையில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க உண்மையாகவே நினைத்து வாழும் வாழ்க்கைதான் மகிழ்வான வாழ்க்கை. இத்தகைய மனம் கொண்டவர்களுக்கு உடலில் இயல்பாகவே நல்ல எதிர்ப்பு தன்மை இருக்கும்.
காரணம் நாம் பயப்படும்போது தான் நம் உடல் படபடபுக்கு உள்ளாகி தேவையற்ற கவலைகள் உள்புகுந்து உடலின் உள்ளுறுப்புக்கள் நரம்பு மண்டலம் என அனைத்தையும் சோர்வாக்கி விடும். இத்தகைய சூழ்நிலையில் மிக எளிதாக நோய் தொற்று பரவும். ஆனால் எப்போதும் தைரியமாகவும் உறுதியான மனதுடனும் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூச்சு நன்றாக இயங்கும் உடலுக்குத் தேவையான பிராண வாயு சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த சூழலில் எந்த வகையான நோய்த் தொற்றையும் நம் உடல் மிக எளிதாக எதிர்த்து நம்மை பாதுகாக்கும்.
மேலும் நாம் போதுமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை முறைப்படி தினமும் செய்தால் நம் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.நம்முடைய தினப்படி உணவோடு கூடுதலான சத்துப் பொருட்களை குறிப்பாக நோய் எதிர்ப்பை வளர்க்கக் கூடிய உணவுகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் சேர்த்துக் கொள்வது மேலும் நன்மை பயக்கும்.
முளைக்கட்டிய பயிறு கீரைவகைகள் பழங்கள் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நம்முடைய தினப்படி உணவுகளில் சேர்ப்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும்.