
இவற்றை தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட சில மருத்துவமனைகளில் தொற்றா நோய்களுக்கான இலவச பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இலவச பரிசோதனைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களைக்காட்டிலும் ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருப்பதாக மருத்துவத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. உடல் நலம் குறித்து பரிசோதனை செய்வதில் ஆண்களிடம் ஆர்வமின்மை நிலவுகிறது. பெண்களை அழைத்துவரும் ஆண்கள், பெண்களை பரிசோதனை மையத்துக்குள் அனுப்பி வைத்துவிட்டு வீணாக வெளியே காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களும்கூட, தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.