search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதியவர்களும்.. மதுவும்.. அளவும்..
    X
    முதியவர்களும்.. மதுவும்.. அளவும்..

    முதியவர்களும்.. மதுவும்.. அளவும்..

    மது உடலுக்கு கேடுபயக்கும். ஆனால் அந்த பழக்கத்தை கைவிட முடியாத முதியோர்கள் அதன் பாதிப்பை ஓரளவாவது குறைக்க என்னென்ன செய்யலாம் தெரியுமா?
    பணியில் இருந்து ஓய்வு.. குடும்பத்தில் இருந்து தனிமை.. பொழுதுபோக்கே இல்லாத சூழல்.. இப்படி தவிக்கும் முதியோர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட அளவினர் மது அருந்தும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பது கவனிக்கத் தகுந்தது. மது உடலுக்கு கேடுபயக்கும். ஆனால் அந்த பழக்கத்தை கைவிட முடியாத முதியோர்கள் அதன் பாதிப்பை ஓரளவாவது குறைக்க என்னென்ன செய்யலாம் தெரியுமா?

    ருசித்து குடியுங்கள்: வேகவேகமாக குடிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கம். அதனால் ஏற்படும் பாதி்ப்பு அதிகம். ஐரோப்பியர்கள் ரசித்து, ருசித்து குடிப்பார்கள். அதுவே பாதிப்பை குறைக்கும் வழி. ஒரே நேரத்தில் அதிகமாக குடித்தால் ஈரல் மற்றும் பான்கிரியஸ் செயல் அதிகரிக்கும். அதனால் இதயம் பலவீனமாகும். தொடர்ந்து மூன்று, நான்கு ‘பெக்’ குடித்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அபாயகரமான அளவு குறைந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    மதுவும் தண்ணீரும்: மது உடலுக்குள் சென்றால், அதிகமான அளவு சிறுநீர் கழிக்கவேண்டியநிலை உருவாகும். அதனால் உடலில் நீர்ச்சத்து மற்றும் தாது சத்துக்குறைபாடு உருவாகும். அதை தொடர்ந்து அதிகபட்ச சோர்வு தோன்றி, நினைவிழப்பு வரைகூட செல்லலாம். ஆகவே மது அருந்தும் முன்பும், மது அருந்தும் போதும், பின்பும் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். பருகினால் நீர்ச்சத்து இழப்பும், சோர்வும் உடலுக்கு ஏற்படாது.

    மதுவோடு புகைவேண்டாம்: மது அருந்துகையில் ஒருபோதும் புகைக்கக்கூடாது. இரண்டையும் ஒன்றாக செய்தால் வாய் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படும் சூழல் அதிகரிக்கும். புகைத்துக்கொண்டே குடித்தால், அளவு தெரியாமல் அதிகமாக குடித்துவிடுவார்கள். மதுவும், புகையும் உடலுக்கு கேடு பயக்கும் மிக முக்கியமான பொருட்கள் என்பதால், இரண்டையும் ஒன்று சேர்த்தால் உடல் மிகுந்த ஆபத்தை சந்திக்கும்.

    பார்ட்டியில் மது: பார்ட்டிகளில் குறைந்த அளவில் மிக நிதானமாக மது அருந்துங்கள். இடை இடையே தண்ணீரோ, எலுமிச்சை சாறுவோ பருகுங்கள். காரமற்ற, எண்ணெய் இல்லாத உணவையும் மெல்ல மென்றுகொண்டிருங்கள். இவைகளை எல்லாம் சாப்பிடும்போது மதுவின் அளவு வெகுவாக குறைந்துவிடும். மது குறையும்போது உடல் பாதிப்பும் குறையும்.

    கார் ஓட்ட வேண்டாம்: மது அருந்திவிட்டால் நிதானம் போய்விடும். மனதும் ஒருநிலையில் இயங்காது. பார்வைத்திறனும் பாதிக்கப்படும். சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சமயோசிதமாக முடிவெடுக்கவும் இயலாது. அதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.

    கலப்பு மதுவில் கவனம்: சிலர் பலவகை மதுவை ஒன்றாக கலந்து குடிப்பார்கள். அது தவறு. அதனால் தன்னிலை இழப்பும், பாதிப்பும் அதிகரிக்கும்.

    கவலைதரும் ‘சைடு டிஷ்’: மது அருந்தும்போது வறுத்த மாமிச உணவுகள், மிக்சர் போன்றவைகளை பலரும் சாப்பிடு கிறார்கள். வறுத்த, பொரித்த உணவுகள் வயிற்றெரிச்சல், அசிடிட்டி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். அவைகளுக்கு பதிலாக சாலட் சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவைகள் உள்ளன. இவை, மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். வேகவைத்த முட்டை, வறுத்த வேர்க்கடலை, முந்திரிபருப்பு போன்றவைகளும் சாப்பிடலாம்.

    மதுவுக்கு பதில் ஒயின்: கறுப்பு நிறம்கொண்ட திராட்சையில் இருந்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒன்பது முதல் 14 சதவீதம் ஆல்ஹகால் அடங்கியிருக்கிறது. அதில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட் நிறைய உள்ளது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொழுப்பின் அளவை குறைத்து, இதயத்தின் இயக்கத்தையும் மேம்படுத்தும். பச்சை, மஞ்சள் நிற திராட்சைகளில் இருந்து ஒயிட் ஒயின் தயாராகிறது. இதுவும் இதயத்திற்கு ஏற்றது. அதனால் மதுவில் இருந்து ஒயினுக்கு மாறிவிடுங்கள். அதையும் அளவோடு பருகுங்கள்.

    ஒருநாள் அளவு: ஒருநாள் எவ்வளவு பருகலாம் என்பது மிகவும் கவனிக்கத்தகுந்தது. ‘ஸ்டேன்டர்டு டிரிங்’ என்பது 60 மி.லி! ஒன்றரை என்பது 90 மி.லி! அதற்கு மேல் பருகக்கூடாது. அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பருகவேண்டும்.
    Next Story
    ×