search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை
    X

    சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை

    மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும்.
    சித்தா மற்றும் ஆயுர்வேதத்தின்படி மனிதர்களுக்கு நோய் வரக்காரணம் மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சரியான விகிதத்தில் இல்லாமல் இருப்பதே ஆகும். அவை கூடும் போதோ அல்லது குறையும் போதோ நோய் வருகிறது.

    வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்து ஆரோக்கியத்தை பேணுவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவதால் இந்த நன்மை கிட்டுகிறது.

    மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும். இப்படி பல்வேறு நன்மைகள் அதில் உள்ளன.

    வெற்றிலையிலும் ஆண், பெண் பேதம் உள்ளது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

    வெற்றிலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், வைட்டமின் சி மற்றும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருளும் உள்ளது.

    வெற்றிலை போடும் போது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு சுவை பித்தத்தை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பில் உள்ள காரச் சுவை வாதத்தை கட்டுப்படுத்தும். இதனால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சம நிலையில் இருந்து நோய் வராமல் காக்கும்.

    அதனால்தான் நமது கலாச்சாரத்தில் தாம்பூலம் தரித்தல் எனும் வெற்றிலை போடும் பழக்கம் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டதும் வெற்றிலை போடுவார்கள். அது ஜீரண சக்தியை மேம்படுத்தும். மேலும் சாப்பாட்டில் ஒவ்வாமை இருந்தாலும் அதனை போக்கும். இப்போது அந்த பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. பண்டிகை, திருமணம் போன்ற விழாக்களின் போதே பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வெற்றிலை போடுகின்றனர். மற்ற நாட்களில் கடைப்பிடிப்பதில்லை.

    வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து மெல்லும் பழக்கம் ஏற்பட்ட பின்னரே வெற்றிலை போடுவது கெட்ட பழக்கம் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டது இதற்கு முக்கிய காரணமாகும். புகையிலை இல்லாமல் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது உடல்நலத்திற்கு உகந்ததே. வெற்றிலை போடும் போது முதல் இரண்டு முறை சுரக்கும் உமிழ்நீரை உமிந்துவிட வேண்டும். அதுதான் நல்லது.

    நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வெற்றிலை போடுவது அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது. ஏன்னெனில் அவர்களின் ஜீரண சக்தி குறைந்திருக்கும். வெற்றிலை போடுவதால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

    இன்றைய காலக்கட்டத்தில் சின்னஞ் சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினை உள்ளது. கீழே விழுந்து லேசான அடிபட்டாலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைபாடே. சுண்ணாம்பில் கால்சியம் அதிக அளவு உள்ளது. வெற்றிலை போடும் போது நமக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது.

    பண்டைய காலத்தில் அனைவரும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததால் அவர்கள் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கப் பெற்று வயதானாலும் எலும்பு தேய்மானம், மூட்டுவலி பிரச்சினையின்றி திடமாக இருந்தார்கள்.

    வெற்றிலை மிகச்சிறந்த மூலிகை என்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
    குழந்தை பெற்ற பின்னர் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒமக்களி, சுக்கு களி, பூண்டுகளி ஆகிய லேகியங்கள் இரவில் சாப்பிட கொடுப்பார்கள். அது செரிமானமாகவும் பால் சுரப்பை அதிகமாக்கவும் அவர்களுக்கு வெற்றிலையை மெல்ல கொடுப்பார்கள். அது மட்டும் அல்லாமல் வெற்றிலையை விளக்கெண்ணையில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டுவார்கள். இவ்வாறு செய்வதால் பால் சுரப்பது அதிகரிக்கும்.

    குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலை காம்பை விளக்கெண்ணையில் தடவி ஆசன வாயில் செலுத்த மலம் உடனே வெளிவரும்.

    வெற்றிலையுடன் துளசி இலை சேர்த்து சாப்பிட சளி மறையும். சிறு குழந்தைகளாக இருக்கும் போது அவித்து அதனை வடிகட்டி ஒரு சங்கு கொடுக்க சளி, இருமல், மூச்சு திணறல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

    சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். வாயில் தூர்நாற்றம் வீசும் பிரச்சினை உடையவர்கள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, ஜாதிபத்தரி போன்றவைகள் சேர்த்து மெல்லும் போது வாயில் உள்ள கிருமிகளை அழித்து தூர்நாற்றத்தை நீக்கும்.

    தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
    வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கிப் புண்ணின் மீது பற்றாகப் போட விரைவில் குணமாகும்.

    வெற்றிலை விஷக்கடியை குணமாக்க வல்லது. சாதாரணமான வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று தின்றால் விஷம் எளிதில் இறங்கும்.

    Next Story
    ×