search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நுரையீரலை வலுப்படுத்தும் யோகா மற்றும் முத்திரைகள்
    X

    நுரையீரலை வலுப்படுத்தும் யோகா மற்றும் முத்திரைகள்

    • நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும்.
    • மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.

    எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காமல் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் ராஜ உறுப்புகளில் ஒன்றான நுரையீரலை நன்றாக வைத்திருந்தால் நலமாக வாழலாம்.

    உடல் வளையும் தன்மை உள்ளவர்கள், மாணவச் செல்வங்கள், எந்த ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யாதவர்கள் கீழ்குறிப்பிட்ட யோகாசனங்களை தினமும் பயிலுங்கள். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். உடலில் பல பிரச்சினைகள் உள்ளவர்கள், சற்று வயதானவர்கள், யோகாசனத்திற்கு பதிலாக அடுத்து வரும் முத்திரை, தியானம், மூச்சுப்பயிற்சிகளை செய்யுங்கள்.

    புஜங்காசனம்

    விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் இதயம் பக்கத்தில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு இடுப்பிற்கு மேல் உடலை படத்தில் உள்ள படி பின் புறமாக வளைக்கவும். பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையை நோக்கி வரவும். இது போல் மூன்று முறைகள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கும். நல்ல காற்றை உள் வாங்கும். அசுத்தக் காற்றை வெளியேற்றும். நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் அசுத்தக் காற்றுகள், கிருமிகள் தங்காது. முதுகுத்தண்டு திடப்படும்.

    உசட்டாசனம்

    முதலில் வஜ்ராசனமிடவும். முட்டியில் நிற்கவும். ஒவ்வொரு கையினால் கணுக்காலை படத்தில் உள்ளது போல் பிடிக்கவும். கழுத்தை பின்னால் வளைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் மெதுவாக கைகளை எடுத்து நேராக வரவும். இரண்டு முறைகள் செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இந்த யோகாசனத்தை பொறுமையாக பயிற்சி செய்ய வேண்டும். சற்று உயர்நிலை ஆசனம். ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம். தகுந்த யோகா வல்லுனரின் மேற்பார்வையில் பயிலுங்கள். பொதுவாக ஆரோக்கியமாக உள்ளவர்கள். உடல் வளையும் தன்மையுள்ளவர்கள் நிதானமாக இதனை பயிற்சி செய்யுங்கள். முதலில் ஒரு கையால் ஒரு காலை பிடியுங்கள், பின் மாற்றி அடுத்த கையால் காலை பிடியுங்கள்.

    சஸங்காசனம்

    முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து இரு கால் முட்டியையும் சேர்த்து வைக்கவும். பின் மூச்சை வெளியில் விட்டு குனியவும். இரு கைகளையும் படத்தில் உள்ளது போல் பக்கவாட்டில் வைக்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து வஜ்ராசன நிலைக்கு வந்து சாதாரணமாக அமரவும்.

    இதயம், நுரையீரல் நன்கு அமுக்கப்படுகின்றது. அதில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறுகின்றது. நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இதயம், இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும். மன அழுத்தம் நீங்கும். பய உணர்வு நீங்கும்.

    மகாசிரசு முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலை மடித்து உள்ள ங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நடு விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம்/ மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரல் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    இதயம், இதய வால்வுகள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். வாயு, அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். உடலில் எல்லா அவயங்களுக்கும் பிராண ஆற்றல் கிடைக்கும். உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும். கால் பாத வீக்கம், எரிச்சல் வராது. உடல் முழுக்க தச வாயுக்களும் நன்றாக இயங்கும். தசைப் பிடிப்புகள் வராமல் வாழலாம். மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×