search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நுரையீரலைப் பலப்படுத்தும் வீரபத்ராசனம் 1
    X

    நுரையீரலைப் பலப்படுத்தும் வீரபத்ராசனம் 1

    • வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது
    • இருதய கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

    வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1. வடமொழியில் 'வீர' என்பதற்கு 'போர்வீரன்' என்றும் 'பத்ர' என்பதற்கு 'சுபம்' மற்றும் 'துணை' என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது.

    வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது. இவ்வாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. தொடர்ந்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது; மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. தோள்கள் மற்றும் கரங்களைப் பலப்படுத்துகிறது. கை விரல்கள் தொடங்கி கணுக்கால் வரை உடலை நீட்சியடையச் செய்கிறது.

    கவனத்தை கூர்மையாக்குகிறது. கால்களைப் பலப்படுத்துகிறது. கழுத்து வலியைப் போக்குகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகு வலியைப் போக்க உதவுகிறது

    செய்முறை

    தாடாசனத்தில் நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறே கால்களை சுமார் 4 அடி விலக்கி வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறு கைககளை தலைக்கு மேலாக உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். கைகள் நேராக இருக்க வேண்டும்.

    வலது பாதத்தை வலது புறம் நோக்கி 90 degree கோணத்தில் வைக்கவும். இடது பாதத்தைச் சற்றே இடது புறமாகத் திருப்பவும். இரண்டு குதிகால்களும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலது புறமாகத் திருப்பவும். மூச்சை உள்ளிழுக்கவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியை மடக்கவும். வலது முட்டி வலது பாதத்திற்கு நேர் மேலாக இருக்க வேண்டும். வலது தொடை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். நேராகப் பார்க்கவும். அல்லது முதுகை சற்று வளைத்து தலையை உயர்த்தி கூப்பிய கைகளைப் பார்க்கலாம்.

    30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். ஆரம்ப நிலைக்கு வந்து கால் மாற்றிப் பயிலவும்.

    இருதய கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கைகளை இடுப்பில் வைத்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகவும்.

    Next Story
    ×