search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தியானத்தின் போது அலைக்கழிக்கும் மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    X

    தியானத்தின் போது அலைக்கழிக்கும் மனதை கட்டுப்படுத்துவது எப்படி?

    • கூட்டு தியானத்தில் பங்கெடுத்து தியானம் செய்யுங்கள்.
    • மூச்சுக் காற்றை விடுவதையும் எடுப்பதையும் கவனிப்பது.

    தியானத்தின் போது எண்ணங்கள் எழுந்து மனதை அலைக்கழிப்பது என்பது அனேகமாக எல்லாரும் அனுபவிக்கும் பிரச்சனை தான்.ஒவ்வொரு மனிதனின் குணாதிசயமும் வித்தியாசமானது; ஒருவருக்குப் பலன் தரும் ஒரு வழி மற்றொருவருக்கு வேலை செய்யும் என்று சொல்ல முடியாது;

    நாள் முழுவதும் நற் சிந்தனை, நற் செயல்கள் செய்தும் அன்று தியானத்தில் மனம் அடங்காது போகலாம். அதற்கு மாறாக, உடம்பும் மனதும் அலைந்த ஒரு நாளில் மனம் தியானத்தில் சட்டென்று அடங்கியும் போகலாம்!

    * கூட்டு தியானத்தில் பங்கெடுத்து தியானம் செய்யுங்கள். அப்போது உண்டாகும் சாதகமான அதிர்வலைகள் உங்கள் எண்ணங்களை அடக்கும் திறனுள்ளவை.

    * தினம் ஒரு குறிப்பிட்ட ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தியானம் செய்ய அமர்வது. அப்படி ஒரு பழக்கம் உண்டாகிவிட்டால், அந்த நேரத்தில் மனம் எளிதில் அடங்கும்.

    * ஒரு நாளில் சில குறிப்பிட்ட சமயங்களில் செய்யும் தியானங்களில் எந்த நேரத் தியானத்தில் கூடுதல் மனம் எளிதில் அடங்குகிறதோ அந்த நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியானிப்பது.

    * எண்ணங்களை அவற்றின் போக்கில் ஓடவிட்டு ஒரு சாட்சியாக அவற்றைக் கவனிப்பது. இதுவும் பழக்கத்தில் தான் வரும். ஓடும் எண்ணம் சாட்சியையும் அடித்துக்கொண்டு போய்விடுவது அவ்வப்போது நடக்கும்! மீண்டும் விழிப்புடன் தன்னை எண்ணத்துக்கு அன்னியமாக ஆக்கிக்கொண்டு மனதைக் கவனிக்க வேண்டும்.

    * மூச்சுக் காற்றை விடுவதையும் எடுப்பதையும் கவனிப்பது. (இது விபாஸனா முறை)

    * பிராணாயாமம் செய்துவிட்டு தியானம் செய்வது. (தகுந்த குருவிடம் முறைப்படி பிராணாயாமம் கற்பது அவசியம்; நாமாகவே புத்தகத்தில் படித்துவிட்டுச் செய்வது சரியன்று). மனதும் பிராணனும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாதலால், பிராணனை அடக்கினால் மனமும் அடங்கும்.

    * உங்கள் நாம ஜபத்தை செய்யுங்கள். ஜபிக்கும்போது அந்த மந்திரத்தின் பொருளைச் சிந்திப்பது; அது முடியவில்லை என்றால் அந்த மந்திரத்தின் உச்சரிப்பில் கவனம் வைப்பது.

    * ஜப மாலை வைத்துக்கொண்டு ஜபம் செய்யுங்கள்; மந்திரம் ஜெபிக்கும்போது மனம் அலைந்தாலும், கையில் ஜபமாலையின் மேரு தட்டுப்படும்போது, மீண்டும் மனதை ஜபத்தின் பொருளுக்கோ, உச்சரிப்போ திருப்புங்கள்.

    * மந்திரத்துக்கே மனதை அடக்கும் சக்தி உண்டு. தொடர்ந்து மனம் அலைந்தாலும், தொடர்ந்து ஜபிக்கும்போது அந்த மந்திரத்தின் சக்தியே மனத்தை அடக்க உதவும். மனம் அடங்குவது தெரிந்ததும் ஜபத்தை நிறுத்திவிட்டு தியானத்துக்கு மாறலாம்.

    * எண்ண ஓட்டங்களைக் கவனித்தவாரே ஜபிப்பது; எண்ணங்கள் அடங்கும்போது ஜபத்தை நிறுத்துவது; மீண்டும் எண்ணங்கள் ஓடத்தொடங்கினால், மீண்டும் ஜபிப்பது. இப்படிச் செய்யும் போது விரைவில் மனம் அடங்கி, ஜபம் முற்றிலும் நின்றுவிடுவதைக் காணலாம்.

    * தியானிக்கும்போது முதுகுத்தண்டும் கழுத்தும் நிமிர்ந்து நேராக இருக்கவேண்டும் என்பது அடிப்படை. ஆனால், மனதில் எண்ணங்கள் கூடுதல் ஓடும்போது, முதுகுத் தண்டு தொய்வதையும், கழுத்து வளைந்து தலை முன்பக்கம் குனிவதையும் அறிய முடியும். மீண்டும் முதுகுத்தண்டை நிமிர்த்தி கழுத்தையும் நேராக்கினால் எண்ணங்கள் குறைவதைக் காண முடியும்.

    Next Story
    ×