search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    மனதை உறுதியாக்கும் தியானத்தை எல்லோராலும் செய்ய முடியும்...
    X

    மனதை உறுதியாக்கும் தியானத்தை எல்லோராலும் செய்ய முடியும்...

    • மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம்.
    • தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

    நன்மை தீமையை பிரித்து செயல்படும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நல்லது என்று உணர்ந்தால் மட்டுமே மனிதனால் அதை செய்ய முடிகிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை நம்முடைய மனது தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட மனதை கட்டுப்படுத்தி நல்ல வழிப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தவறும் போது பிரச்னைகள் எழுகின்றன. மனித மனம் குரங்கு போன்றது. ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. தாவிக் கொண்டே இருக்கும். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

    மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம். தியானம் மனதை மட்டுமல்ல உடலையும் காக்கும் தன்மை கொண்டது. ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவருக்கு நல்ல எண்ணங்கள் மேலோங்கும். உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.

    எல்லோராலும் தியானம் செய்ய முடியும். அதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. சுயமாக முயல்வதில் தவறு இல்லை. இருப்பினும் ஒரு வழிகாட்டியை அணுகி தியானப் பயிற்சி பெறுவது நல்லது.

    தினம் செய்ய சலனமற்ற, அமைதியான, எழில் மிக்க, இனிய சூழல் அவசியம். இதற்கு அதிகாலை நேரம் சரியானதாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் நேரத்தில் தியானம் செய்யலாம். இது போன்ற அமைதியான சூழல் இருந்தால் மாலை நேரத்திலும் கூட தியானம் செய்யலாம்.

    குறைந்த ஒளி, இதமான சூழல், அமைதியான இடம், நறுமணம் வீசும் காற்று போன்றவை தியானத்தில் மனம் ஈடுபடுவதை மேலும் உறுதி செய்யும்.

    மெல்லிய, இனிய இசையைக் கேட்ட படி தியானம் செய்யும்போது மூளை நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, மன இறுக்கம் குறையும்.

    காலையில் எழுந்து குளித்துவிட்டு அல்லது கை, கால், முகத்தை கழுவிவிட்டு, தளர்வான ஆடை அணிந்து பத்மாசம் அல்லது சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் சௌகரியமாக நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

    தொடையின் மீது உள்ளங்கை மேற்புறம் இருப்பது போல வைக்க வேண்டும். சின்முத்திரை எனப்படும் கட்டை விரல் நுனியையும் ஆட்காட்டி விரல் நுனியையும் தொட்டபடி அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும்.

    மூச்சை ஆழமாக உள் இழுத்து சில விநாடிகள் நிறுத்தி நிதானமாக வெளியே விட வேண்டும். இப்படிச் செய்யும்போது ஒருவித சக்தி நம் உடலுக்குள் பாய்வதை உணரலாம்.

    தொடக்கத்தில் நீண்ட நேரம் தியானம் செய்வது இயலாத காரியம் போலத் தெரியும். எனவே, 5 – 10 நிமிடங்களுக்கு தியானம் செய்ய இலக்கு நிர்ணயித்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யும்போது தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

    Next Story
    ×