search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தியானம்
    X
    தியானம்

    மனதை அடக்க ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம்

    மருந்துகளும் அதனால் வரும் பக்க விளைவுகளும் மலிந்து போன இந்த காலகட்டத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான முறையிலிருந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்.
    ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம் சார்ந்த விடயமோ அல்லது ஏதும் தத்துவம் சார்ந்த விடயமோ என்ற ஆய்வுக்குள் நுழைய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.பொதுவில், மனது ஒருங்கிணைப்புக்கான ஒரு பயிற்சி என்றே இதனை எடுத்துக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது எழுத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் போது, காற்றானது நமது நாசியில் ஒரே சீராக சென்று வருகிறது.

    இப்படி ஒரு லயத்தில் செல்லும் மூச்சுக்காற்றானது உடலில் இதுவரை இருந்து வந்த, தாறுமாறான அதிர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு லயத்தில் ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு பொது இடத்தில் கிளம்பும் இரைச்சல் நின்று போய் அங்கே ஒரு நாதம் கிளம்புகிறது. இந்த நாதமானது உடலுக்கும் மனதுக்கும் மென்மையை தருகிறது. இந்த மென்மையான கீதத்தை, லயத்தை தருவது தான் ஒற்றைச்சொல் தியானம் என்று சொல்லலாம்.

    ஒற்றைச் சொல் தியானத்தின் பலன்களை அதனை அன்றாடம் பயிற்சி செய்து வரும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த உலக வாழ்வில் பொறுமை, அன்பு போன்ற குணங்களை எளிதில் கடைப்பிடித்து விட இலகுவான ஒன்றாக இந்த ஒற்றைச் சொல் தியானம் என்ற உத்தி பயன்படும் என்பது உறுதி.

    ஒற்றைச் சொல் தியான முறை என்பது ஒரு எளிய பிராணயாம பயிற்சி. இதில் மூச்சை உள் இழுக்கும் போதும், வெளிவிடும் போது மிகுந்த நிதானம் தேவை. மெதுவாக படிப்படியாக மூச்சை உள் இழுத்து பயிற்சி செய்யும் போது நுரையீரல் பிராண வாயுவால் நிரம்புகிறது.

    பிறகு ஓ……ம் என்ற ஒலியுடன் மூச்சை வெளிவிடும் போது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கரியமில வாயு வெளியேறுவதுடன் உடலெங்கும் ஒரு வித அதிர்வு பரவுகிறது. இதை இந்த ஒற்றை சொல் பிராணயாம பயிற்சியை செய்யும் போது நன்றாக உணர முடியும். அவரவர் பக்குவம், வயது, திறன், உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வித ஒலிப்பயிற்சிகள் (ஓம் என்பதற்கு பதிலாக ஆமென், அல்லா என்று கூட அவரவருக்கு பிடித்த வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால் ம் என்ற முடியும் ஒலிக்கு அதிர்வு அதிகம்). இதை முறைப்படி பின்பற்றினால், அளவிடற்கரிய நன்மைகளை அடையலாம். இந்த பயிற்சியால் நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் இவற்றிலும் மனநிலையிலும் மிகுந்த மாற்றங்கள் தோன்றுவதை உணர முடியும். பொதுவாக பத்மாசனத்தில் அமருவதும், மனதை ஒருமுகப்படுத்துவதும் எல்லோருக்கும் எளிதல்ல. மனம் என்பது கட்டுப்பாடற்றது.

    அது அலைபாயும் இடத்திற்கு எல்லாம் நம்மை இழுக்கும். ஆனால் அதன் போக்கை நாம் புரிந்து கொண்டு அதை கட்டுப்படுத்த முயன்றால் அது பதுங்க தொடங்கி விடும். குறிப்பிட்ட காலத்தில் தப்பிக்க முடியாது என்று தெரிந்த நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கும். இந்த மனதை அடக்க ஓம் ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம். இது நிச்சயமாக பலன் தருகிறது. இந்த பயிற்சியால் உடலும், மனதும் நெகிழ்ந்து போகிறது. வேண்டாத தளர்ச்சியும், சோர்வும் நீங்குகிறது. வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் மிகுந்த சிரத்தையுடன் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பாக அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 3 மணி முதல் 4 மணிக்குள்) இதனை பயிற்சி செய்ய தொடங்கினால் விரைவில் தொடர் பயிற்சி எளிதாகி விடும்.

    மருந்துகளால் கட்டுப்படாத ஆஸ்துமா ஒற்றைச் சொல் தியான முறைக்கு அடங்கி போனதில் ஆச்சரியமில்லை. அவ்வளவு பலனுள்ளது. இதே போல் மனச்சோர்வுக்காக வைத்தியத்திற்காக வந்த நோயாளிகள் பலரும் ஒற்றைச் சொல் தியானத்தில் பலனை அடைந்திருக்கிறார்கள். ஒற்றைச் சொல் தியான முறை எதையும் தூள்தூளாக்கி மனதுக்கும், உடலுக்கும் வலிமை தரும். ஒற்றை சொல் தியான முறையால் நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. உடல் தசைகள் வலுவடைகிறது. நினைவு திறன் பெருகுகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை பெருகுகிறது. நமக்குள் இருக்கும் மன உறுதி வலுவடைந்து விடுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த பயிற்சியால் நமக்கே தெரியாமல் இருக்கும் தேவையில்லாத மனஇறுக்கம், சோர்வு, அச்சம், கனவு தொல்லை, உடல்வலி உள்பட பல நோய்கள் நீங்கிவிடும்.

    நம்மிடம் காலம் காலமாக மறைந்து கிடக்கும் திறமைகளை நமக்கு முற்றிலும் உணர வைக்கும் ஒரு பயிற்சி இது என்பதை கண்கூடாக காணலாம். ஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள். செய்து பார்த்தாலே பலன் தெரியும்.
    Next Story
    ×