search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஊரடங்கில் உற்சாகமாக ஓடிய சைக்கிள்கள்
    X
    ஊரடங்கில் உற்சாகமாக ஓடிய சைக்கிள்கள்

    ஊரடங்கில் உற்சாகமாக ஓடிய சைக்கிள்கள்... கவனத்தில் கொள்ள வேண்டியவை...

    கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
    கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், நிறைய பேர் குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்தினார்கள். அதை தொடர்ந்து சைக்கிளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பணநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில், எரிபொருளுக்கான செலவு தேவைப்படாததால் சைக்கிள் பயணம் கைமேல் பலன் அளித்திருக்கிறது. கூடவே அது உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைந்துவிட்டது. அதனால் பலரும் சைக்கிள் பயணத்தை பின்பற்றுகிறார்கள். ‘சைக்கிளிங்கை’ உடற்பயிற்சியாக கருதி தொடர்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

    ஒரு மணி நேரம் நீங்கள் மிதமான வேகத்தில் சைக்கிளை ஓட்டிச்சென்றால், உங்கள் உடலில் இருந்து 300 முதல் 350 கலோரி செலவாகும். 50 கிலோ எடைகொண்டவரைவிட 80 கிலோ எடை கொண்டவருக்கு சைக்கிள் பயிற்சி அதிக பலன் தரும். ஒரு மணி நேரம் 10 மைல் வேகத்தில் 50 வயது கொண்டவர் சைக்கிள் ஓட்டும்போது அவரது உடலில் இருந்து 200 கலோரி செலவாகும். அதே நேரத்தில் 80 கிலோ எடைகொண்டவர் உடலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலோரி செலவாகும்.

    தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி பெற்றால் மனஅழுத்தம் குறையும். சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது உச்சி முதல் பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதனால் உடலோடு சேர்ந்து உள்ளமும் இலகுவாகி, அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறது.

    அழகு மீது அக்கறை கொண்ட பெண்கள் அதிக அளவில் சைக்கிளிங் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி பெற்றால் சரும சுருக்கம் மறைந்து, இளமையான தோற்றத்தை பெறுவார்கள்.

    பொதுவாக நடுத்தர வயதை கடக்கும்போது பலரும் நினைவாற்றல் குறைபாட் டால் அவதிப்படுகிறார்கள். அந்த குறை பாட்டில் இருந்து விடுதலை பெற சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை தினமும் செய்துவந்தால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி சுறுசுறுப்பாக செயல்பட்டு புதிய செல்களை உருவாக்கி, நினைவாற்றலை மேம்படச் செய்யும். அதுபோல் பள்ளிக்குழந்தைகளும் தங்கள் வீட்டுப் பகுதியிலே சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டால், அவர்களது நினைவுத்திறனும் மேம்படும்.

    இந்த பயிற்சியால் கால், முதுகெலும்பு, அடிவயிறு, கைகள், கழுத்து என அதிக இயக்கம்கொண்ட உறுப்புகள் அனைத்தும் வலுப்பெறுகின்றன. ஆனால் சைக்கிளின் இருக்கை அமைப்பு சரியாக அமைவது மிக அவசியம். சரியாக அமையாவிட்டால் உடலில் வலி ஏற்படும்.

    இந்த பயிற்சி மூலம் உடலில் உடனடி மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது. அதனால் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பயிற்சியை தொய்வின்றி மேற் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.

    சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இந்த பயிற்சியை தொடங்கவேண்டும். வெறும் வயிற்றில் ஒருபோதும் சைக்கிளிங் பயிற்சியை செய்யக்கூடாது.

    சாலைகளில் சைக்கிள் ஓட்டி பயிற்சி பெறும்போது பாதுகாப்பில் மிகுந்த விழிப்போடு இருங்கள். பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் கவனமாக ஓட்டவேண்டும். பிரத்யேக ஹெல்மெட் அணிந்துகொள்வதும் அவசியம். சக்கரத்தின் ஸ்போக், பெடல் மற்றும் சைக்கிளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு இரவு நேர பயிற்சியை பெறுங்கள்.
    Next Story
    ×